
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் திடீர் ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து இன்சமாம்-உல்-ஹக் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றமளிக்கும் வகையில் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிடும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்பது போன்ற குற்றச்சாட்டு அங்கு தீவிரமாக வெடித்துள்ள நிலையில், இன்சமாம்-உல்-ஹக் தனது தலைமை தேர்வாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்சமாம் ஆகஸ்ட் 2016 முதல் ஜூலை 2019 வரை தலைமை தேர்வாளராகப் பணியாற்றிய நிலையில், சமீபத்தில் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Pakistan Selector Inzamam-ul-Haq resigned
இன்சமாம்-உல்-ஹக் வெளியேறியதன் பின்னணி
பாகிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, இன்சமாம் யாசோ இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
இது பல கிரிக்கெட் வீரர்களின் முகவராக செயல்படும் தல்ஹா ரெஹ்மானிக்கு சொந்தமான நிறுவனம் ஆகும்.
இந்நிறுவனத்துடன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷஹீன் அப்ரிடி போன்ற பல கிரிக்கெட் வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன் தனது வீரர்களுக்கு ஐந்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இது சர்ச்சையாக வெடித்த நிலையில், இதில் இன்சமாமுக்கு தொடர்பு இருப்பதுபோல் கருத்துக்கள் பரவி வருவதால், விரக்தி அடைந்த அவர் ராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.