PAK vs SL : முகமது ரிஸ்வான் பேட்டிங் அபாரம்; இலங்கைக்கு 253 ரன்கள் இலக்கு
ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 சுற்றில் வியாழக்கிழமை (செப்டம்பர் 14) நடந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 253 ரன்களை வெற்றி இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் எனும் நிலையில், மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இரு தரப்பிலும் தலா 45 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா சபீக் 52 ரன்கள் எடுத்து தனது முதல் ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.
முகமது ரிஸ்வான் அபார பேட்டிங்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் விக்கெட் கீப்பர் பேட்டரான முகமது ரிஸ்வான் கடைசி வரை அவுட்டாகாமல் 86 ரன்கள் குவித்தார். இதற்கிடையே மீண்டும் மழை பெய்ததால் இருதரப்பிலும் 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இப்திகார் அகமது தன் பங்கிற்கு 47 ரன்கள் சேர்க்க, பாகிஸ்தான் அணி 42 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை எடுத்தது. இலங்கையில் சிறப்பாக பந்துவீசிய மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும், பிரமோத் மதுஷன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். 253 ரன்கள் எனும் வெற்றி இலக்குடன் நடப்பு சாம்பியன் இலங்கை பேட்டிங்கை தொடங்கியுள்ளது.