ஒருநாள் உலகக்கோப்பை 2023 : அதிக ரன் குவித்த வீரர்களில் டாப் 2 இடங்களில் இந்தியர்கள் ஆதிக்கம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் மொத்தமுள்ள 45 போட்டிகளில் வியாழக்கிழமை நடந்த இந்தியா vs வங்கதேசம் போட்டியுடன் இதுவரை 17 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் இல்லை என்றாலும், அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இந்தியர்களே உள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர மற்ற மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ரோஹித் ஷர்மா 265 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் சதமடித்ததன் மூலம் கிடுகிடுவென உயர்ந்த விராட் கோலி 259 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்தின் டெவோன் கான்வே 249 ரன்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பந்துவீச்சில் முன்னிலையில் பும்ரா, ஜடேஜா
பந்துவீச்சைப் பொறுத்தவரை நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 11 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் 10 விக்கெட்டுகளுடன் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளார். இதில் மிட்செல் சான்ட்னர் ஒருமுறை ஐந்து விக்கெட்டையும், ஜஸ்ப்ரீத் பும்ரா ஒருமுறை 4 விக்கெட்டையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து நியூசிலாந்தின் மேட் ஹென்றி 9 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ள நிலையில், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளுடன் நான்காவது இடத்தில் உள்ளார். இதன் மூலம் பந்துவீச்சில் இந்தியா மற்றும் நியூசிலாந்து வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதர இந்திய பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை, குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளுடன் இந்திய பந்துவீச்சாளர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.