ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் காயமடைந்ததால் ஒருநாள் உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு
ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து அணியிலிருந்து மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக, ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய கேன் வில்லியம்சனுக்கு காயம் ஏற்பட்டது. அவர் காயத்திலிருந்து குணமடைய நீண்ட காலம் ஆகும் என்பதால் நியூசிலாந்து கிரிக்கெட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது மற்றொரு வீரரும் காயம் காரணமாக விலகுவது அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் லீக்கான டி20 ப்ளாஸ்டில் விளையாடும் போது மைக்கேல் பிரேஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டது. மைக்கேல் பிரேஸ்வெல் காயத்திலிருந்து முழுமையாக குணமடைய 6 முதல் 8 மாதங்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது.
மைக்கேல் பிரேஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட் புள்ளிவிபரம்
ஆல்ரவுண்டரான மைக்கேல் பிரேஸ்வெல் 2022 மார்ச் மாதம் சர்வதேச ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்காக அறிமுகமானார். மேலும் இதுவரை 19 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 118.6 ஸ்டிரைக் ரேட்டில் 510 ரன்களை எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் அடங்கும். மேலும் 15 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹைதராபாத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தது, அவரது மறக்க முடியாத இன்னிங்சாகும். இதற்கிடையே, தற்போது காயத்தால் அவதிப்படும் மைக்கேல் பிரேஸ்வெல் வியாழக்கிழமை (15) ஜூன் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இதனால் அவர் ஒருநாள் உலகக்கோப்பையில் இடம் பெறும் வாய்ப்பை இழப்பார் என நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.