ரத்தன் டாடா ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை கொடுப்பதாக வெளியான தகவல் வதந்தி
பாகிஸ்தானை, ஆப்கான் கிரிக்கெட் அணி வீழ்த்தியதை அடுத்து, இந்தியக் கொடியை ஏந்தியதற்காக ஐசிசியால், கிரிக்கெட் வீரர் ரஷீத் கானுக்கு ரூ.55 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷீத் கானுக்கு ரூ.10 கோடி பரிசுத் தொகை பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வழங்குவதாக வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. இதைத் தொடர்ந்து, இந்த தகவலில் உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்து ரத்தன் டாடா, "எந்த ஒரு கிரிக்கெட் உறுப்பினருக்கும் அபராதம் அல்லது சன்மானம் பற்றி ஐசிசி அல்லது எந்தவொரு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் நான் எந்த பரிந்துரையும் செய்யவில்லை". "எனக்கு கிரிக்கெட்டுடன் எந்த தொடர்பும் இல்லை. இதுபோன்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளையும் வீடியோக்களையும் மக்கள் நம்ப வேண்டாம்." என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரத்தன் டாடாவை சுற்றிச் சுழலும் வதந்தி
முன்னதாக கடந்த ஜூன் மாதம், ரத்தன் டாடா கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. அப்போதும், மறுப்பு அறிக்கை வெளியிட்ட ரத்தன் டாடா, "இது மிகவும் முக்கியமான அறிவிப்பு. கிரிப்டோகரன்சியுடன் எனது தொடர்பைக் குறிப்பிடும் கட்டுரைகள் அல்லது விளம்பரங்களை நீங்கள் பார்த்தால், அவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் மக்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன." என்று கூறினார். மேலும், எந்த வடிவத்திலும் கிரிப்டோகரன்சியுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று மீண்டும் அவர் வலியுறுத்தினார். பின்னர், நெட்டிசன்கள் விழிப்புடன் இருக்குமாறும், இதுபோன்ற மோசடி திட்டங்களிலிருந்து விலகி இருக்குமாறும் ரத்தன் டாடா மேலும் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.