அர்ஜென்டினா கால்பந்து ரசிகர்கள் மீது தாக்குதல்; லியோனல் மெஸ்ஸி காட்டம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் புதன்கிழமை (நவம்பர் 22) நடைபெற்ற ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தகுதிச் சுற்றில் அர்ஜென்டினா கால்பந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது. போட்டியை நடத்தும் பிரேசில் தொடர்ந்து மூன்றாவது தோல்விக்கு ஆளானது. இதற்கிடையே, போட்டிக்கு முன்னதாக, ரசிகர் கூட்டம் வன்முறையில் ஈடுபட்டதால் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. இந்நிலையில், தேசிய கீதத்தின் போது அரங்கில் சண்டையிட்டது அர்ஜென்டினா ரசிகர்கள்தான் என பிரேசில் போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இரத்தக் காயத்துடன் ஒரு ரசிகர் ஒரு ஸ்ட்ரெச்சரில் மைதானத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.
வன்முறை குறித்து அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி கருத்து
வன்முறையால் போட்டியை தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், போட்டிக்குப் பிறகு சம்பவம் குறித்து பேசிய அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி, வன்முறையால் பாதிக்கப்பட்ட தனது நாட்டு ரசிகர்களுக்கு அனுதாபம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், "பிரேசிலின் மரக்கானாவில் அர்ஜென்டினா மீண்டும் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அர்ஜென்டினா ரசிகர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது பைத்தியக்காரத்தனமானது, இது இப்போது முடிவுக்கு வர வேண்டும்!!" என்றார். மேலும், பதற்றம் உச்சத்தில் இருந்ததால் ஆட்டம் தொடங்கும் முன் மெஸ்ஸிக்கும், பிரேசிலின் ரோட்ரிகோவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.