மெர்டேகா கோப்பையில் மலேசியாவுக்கு எதிராக மோத தயாராகும் இந்திய கால்பந்து அணி
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மலேசியாவுக்கு எதிராக இந்திய கால்பந்து அணி, மினி ஆசிய கோப்பை என வர்ணிக்கப்படும் 2023 மெர்டேகா கோப்பையில் விளையாட உள்ளது. 1957இல் இந்த கோப்பை தொடங்கப்பட்டதிலிருந்து 17 சீசன்களில் இந்திய அணி பங்கேற்றது. இந்தியா 1959 மற்றும் 1964 என இரண்டு முறை மெர்டேகா கோப்பையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 1959ல் கோப்பையை வெல்வதற்கு நெருங்கி வந்த போதிலும், மலேசியாவுக்கு எதிராக 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. 1964ல் மியான்மாரிடம் மீண்டும் இறுதிப் போட்டியில் இந்தியா 0-1 என தோற்கடிக்கப்பட்டது. மேலும், போட்டியின் 1965 மற்றும் 1966 சீசன்களில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பாலஸ்தீனம் விலகலால் போட்டி அமைப்பில் மாற்றம்
முன்னதாக, இது 10 அணிகள் பங்கேற்கும் 20 நாட்கள் கொண்ட போட்டியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மலேசியா, இந்தியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் மட்டும் பங்கேற்கும் போட்டியாக குறைக்கப்பட்டது. இருப்பினும், போர் பதட்டங்கள் மற்றும் பயணப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் பின்வாங்கியது. இதையடுத்து, தஜிகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மலேசியா மற்றும் இந்தியா இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தானை எதிர்கொள்ளும். இந்திய அணி அக்டோபர் 13ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மலேசியாவை எதிர்த்து விளையாட உள்ளது. அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ரசிகர்கள் போட்டியை நேரடியாக கண்டுகளிக்கலாம்.