Loading...
IPL 2027-ல் தோனி விளையாடுவாரா? சேப்பாக்கம் மைதானத்தில் பிரியாவிடை பெறுவாரா 'தல' தோனி?
தோனிக்கு, ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு விடைகொடுப்பது மட்டும் எளிதாக இல்லை

IPL 2027-ல் தோனி விளையாடுவாரா? சேப்பாக்கம் மைதானத்தில் பிரியாவிடை பெறுவாரா 'தல' தோனி?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 17, 2026
02:57 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2027 வீரர்கள் தக்கவைப்பு கெடு நெருங்கி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களின் மனதில் மீண்டும் அதே பழைய கேள்வி எழுந்துள்ளது. "தல தோனி மீண்டும் மஞ்சள் உடையில் களமிறங்குவாரா?" 2020 சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எந்த முன்னறிவிப்புமின்றி ஓய்வு பெற்ற தோனிக்கு, ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு விடைகொடுப்பது மட்டும் எளிதாக இல்லை. 2021 நவம்பரில் சிஎஸ்கே-வுக்கு 4-வது கோப்பையை வென்று கொடுத்த பிறகு, "எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் விளையாட விரும்புகிறேன்; அது அடுத்த ஆண்டா அல்லது 5 ஆண்டுகள் கழித்தா என்று தெரியாது" என அவர் அளித்த வாக்குறுதியே ரசிகர்களை இன்றளவும் காத்திருக்க வைத்துள்ளது.

சவால்

தள்ளிப்போன பிரியாவிடையும், உடற்தகுதி சவால்களும்

2023 இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 5-வது முறையாக கோப்பையை வென்றபோதே தோனி ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ரசிகர்களுக்கான பரிசாக மேலும் ஒரு சீசன் விளையாட விரும்புவதாகக் கூறி ஓய்வை தள்ளிப்போட்டார்.

2023-க்குப் பிறகு முழங்கால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி, 2025 மெகா ஏலத்திற்கு முன்பு அன்கேப்ட் வீரர் விதியின் கீழ் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார்.

ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்ததால் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனி, அந்த சீசனில் 135.17 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடினாலும், சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.

2026 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்தபோதிலும், கால் தசை காயம் மற்றும் உடற்தகுதி பிரச்சினைகளால் ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை.

சிஎஸ்கே நிர்வாகம்

புதிய மாற்றத்தில் சிஎஸ்கே நிர்வாகம்

கடந்த இரண்டு சீசன்களில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிய அளவிலான மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கின் பயணம் முடிவுக்கு வந்து, முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

துணைப் பயிற்சியாளர்கள் குழுவிலும் பல புதிய முகங்கள் இணைந்துள்ளனர்.

தோனியின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு எப்போதும் அவரிடமே விடப்பட்டுள்ளதாக சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

தோனியின் பதில்

"நான் ஒரு பழைய வின்டேஜ் வாகனம்"

கடந்த அக்டோபர் மாதம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசிய 45 வயதான தோனி, "டிசம்பருக்கு முன்பாக, இன்னும் ஒரு சீசன் விளையாடும் அளவிற்கு நான் வலுவாக இருக்கிறேனா என்பதைப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்ததுடன், மருத்துவர்கள் தொடர்ந்து ஓட வைக்க வேண்டிய "பழைய வின்டேஜ் வாகனம்" எனத் தன்னைத்தானே கிண்டல் செய்தார்.

அடுத்த சீசனில் தோனி அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வேண்டியதோ அல்லது விக்கெட் கீப்பிங் சுமையைச் சுமக்க வேண்டியதோ இல்லை.

ஆனால், அவரது உடற்தகுதி ஒத்துழைத்தால், சென்னை ரசிகர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் பாடல் ஒலிக்க, ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் தனது சொந்த மண்ணில் கம்பீரமாக விடைபெற 2027 சீசன் ஒரு பொன்னான வாய்ப்பாக அமையும்.

ADVERTISEMENT