லக்னோ அணியிலிருந்து முகமது ஷமி மற்றும் எம். சித்தார்த்தை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்; சாம் கரன் LSG-க்கு மாற்றம்
செய்தி முன்னோட்டம்
IPL 2027 தொடருக்கு முன்பாக அணிகளில் அதிரடியான மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணிகள் இடையே முக்கிய வீரர் பரிமாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, லக்னோ அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் தமிழக இடது கை சுழற்பந்து வீச்சாளர் சித்தார்த் ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மாறியுள்ளனர். அதற்கு பதிலாக, இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் சாம் கரன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு சென்றுள்ளார்.
முகமது ஷமி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலத்தை உயர்த்தும் முகமது ஷமி
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற 36 வயதான முகமது ஷமி, கடந்த ஐபிஎல் சீசனில் லக்னோ அணிக்காக 13 போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக, 2024 முதல் பவர்பிளே ஓவர்களில் 14 விக்கெட்டுகளை (எகானமி 8.76) வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் பவர்பிளே பந்துவீச்சில் 10.14 என்ற அதிக எகானமி கொண்டு தடுமாறிய ராஜஸ்தான் அணிக்கு, ஷமியின் வரவு மிகப்பெரிய பலமாக அமையும்.
தமிழக வீரரான எம். சித்தார்த்தும் ராஜஸ்தான் அணிக்கு செல்வது அவர்களின் சுழற்பந்து வீச்சுத் தேர்வுக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.
டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 239 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஷமியின் அனுபவம் ராஜஸ்தானின் பந்துவீச்சுக் கோட்டைக்கு அச்சாணியாக இருக்கும்.
சாம் கரன்
லக்னோ அணியில் இணையும் சாம் கரன்
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் CSK அணிகளுக்கு பிறகு, சாம் கரன் தனது 3-வது ஐபிஎல் அணியாக LSG- யில் இணையவுள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் 2026 சீசனை முழுமையாக தவறிய அவர், தற்போது லக்னோ அணியின் ஆலோசகரான டாம் மோடியின் வழிகாட்டுதலின் கீழ் மீண்டும் களமிறங்குகிறார்.
முன்னதாக யூஏஇ தொடரில் டாம் மோடியின் நேரடிப் பயிற்சியில் சாம் கரன் Desert Vipers அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ரிஷப் பண்ட் டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்பியுள்ளதால், லக்னோ அணியில் கேப்டன் பதவிக்கான இடம் காலியாக உள்ளது.
2022 டி20 உலகக் கோப்பையின் 'தொடர் நாயகன்' மற்றும் இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருது வென்ற சாம் கரன், லக்னோ அணியின் கேப்டன் பந்தயத்தில் முன்னணியில் உள்ளார்.