INDvsNZ 3வது டெஸ்ட் போட்டி: ஆறுதல் வெற்றியையாது பெறுமா இந்திய அணி?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து, 12 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்த இந்திய கிரிக்கெட் அணி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் விளையாட உள்ளது. முன்னதாக, நியூசிலாந்து அணி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, முறையே எட்டு விக்கெட்டுகள் மற்றும் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெற்றது. பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேகமூட்டமான சூழ்நிலையில் உயர்தர சீம் பந்துவீச்சின் பின்னணியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்டில் சுழற்பந்துவீச்சு மூலம் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா vs நியூசிலாந்து 3வது டெஸ்ட்: முன்னோட்டம்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்றாவது போட்டியில் விராட் கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா போன்ற மூத்த பேட்டர்கள் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் அவர்களால் சுழற்பந்து வீச்சை எதிர்க்க முடியவில்லை. அடுத்து வரவிருக்கும் பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் தங்கள் ஃபார்மைக் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிபுணர்கள் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களும் இந்த விஷயத்தில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததற்கான பொறுப்பு மூத்த இந்திய வீரர்களையே சாரும் என்று கூறியுள்ளார்.
நியூசிலாந்தை பின்பற்ற ரோஹித் ஷர்மா அறிவுரை
இதற்கிடையில், திட்டமிடுதலின் அடிப்படையில் இந்திய வீரர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்களைப் பின்பற்ற வேண்டும் என்று கேப்டன் ரோஹித் ஷர்மா கூறினார். "யாருடைய திறமையையும் நான் சந்தேகிக்கவில்லை. நான் இதை அதிகம் போஸ்ட்மார்ட்டம் செய்ய மாட்டேன். ஆனால் பேட்டர்கள் தங்கள் திட்டங்களுடன் வர வேண்டும் மற்றும் நியூசிலாந்து பேட்டர்கள் காட்டிய திட்டங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்." என்று புனேவில் நடந்த போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பின் போது ரோஹித் ஷர்மா கூறினார். ரோஹித் மேலும் கூறுகையில், "நீங்கள் மிகையாக செயல்பட வேண்டியதில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட நபர்களுடன் அமைதியாக உரையாட வேண்டும். மேலும் அவர்கள் என்ன நிலையில் உள்ளார்கள். ஒரு குழுவாக, அவர்களிடம் என்ன தேவை என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்." என்றார்.
இந்தியா vs நியூசிலாந்து 3வது டெஸ்ட்: நேருக்கு நேர் சாதனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 65 முறை நியூசிலாந்து அணியை எதிர்கொண்டுள்ளது. அதில் இந்திய அணி அதிகபட்சமாக 22 போட்டிகளை வென்றுள்ள நிலையில், நியூசிலாந்து 15 போட்டிகளில் வென்றுள்ளது. 28 போட்டிகள் டிரா ஆகியுள்ளன அல்லது கைவிடப்பட்டுள்ளன. இந்தியா vs நியூசிலாந்து 3வது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 அன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு தொடங்கும். இந்த போட்டி ஸ்போர்ட்ஸ்18 நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும். மேலும், ஜியோ சினிமாவிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
இந்தியா vs நியூசிலாந்து 3வது டெஸ்ட்: வீரர்கள் பட்டியல்
நியூசிலாந்து அணி: டெவோன் கான்வே, டாம் லாதம் (கேப்டன்), வில் யங், கேன் வில்லியம்சன், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி , அஜாஸ் படேல், வில்லியம் ஓ'ரூர்க். இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா (துணை கேப்டன்), முகமது சிராஜ், ஆகாஷ் தீப், வாஷிங்டன் சுந்தர்.