FIFA உலகக்கோப்பை 2026: கத்தார், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளில் விளையாடும் 3 இந்திய வம்சாவளி வீரர்கள்!
செய்தி முன்னோட்டம்
ஒட்டுமொத்த சர்வதேச விளையாட்டு உலகமும் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் 'ஃபிபா உலகக் கோப்பை 2026' (FIFA World Cup 2026) கால்பந்து திருவிழா, வரும் ஜூன் 11-ஆம் தேதி அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் மிக பிரம்மாண்டமாகத் தொடங்க உள்ளது. இம்முறை 48 நாடுகள் பங்கேற்கும் இந்த மாபெரும் தொடருக்கு இந்திய தேசிய கால்பந்து அணி தகுதி பெறவில்லை என்றாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தஹ்சின் முகமது, சர்ப்ரீத் சிங், நிஷான் வேலுப்பிள்ளை ஆகியோர் வெவ்வேறு நாடுகளின் தேசிய அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.
கத்தார் - கேரளா வம்சம்
தஹ்சின் முகமது ஜம்ஷித்
வெறும் 19 வயதேயான இளம் விங்கர் தஹ்சின் முகமது ஜம்ஷித், நடப்பு ஆசிய சாம்பியனான கத்தார் தேசிய அணியில் இடம்பிடித்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். இவரது பெற்றோர் கடந்த 2006-ஆம் ஆண்டு கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து கத்தாருக்குக் குடிபெயர்ந்தனர். கத்தாரின் உலகத்தரம் வாய்ந்த 'ஆஸ்பயர் அகாடமி'-யில் கால்பந்து பயின்ற இவர், அந்நாட்டின் உயரிய 'கத்தார் ஸ்டார்ஸ் லீக்' தொடரில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தற்பொழுது பிரபல 'அல் துஹைல் எஸ்சி' கிளப்பிற்காக விளையாடி வரும் தஹ்சின், கத்தாரின் உலகக் கோப்பை இறுதிப் பட்டியலில் இடம்பிடித்து ஒட்டுமொத்த மலையாளிகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
நியூசிலாந்து - பஞ்சாப் வம்சம்
சர்ப்ரீத் சிங்
இந்திய வம்சாவளி கால்பந்து வீரர்களில் சர்வதேச அளவில் மிகவும் பரிச்சயமான பெயர் 27 வயதான சர்ப்ரீத் சிங். நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் பிறந்த இவருடைய பெற்றோர் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். அட்டாகிங் மிட்பீல்டரான சர்ப்ரீத் சிங், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெர்மனியின் உலகப் புகழ்பெற்ற 'பேயர்ன் முனிச்' கிளப்பால் ஒப்பந்தம் செய்யப்பட்டு, புகழ்பெற்ற 'புன்டஸ்லிகா' லீகில் விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற சரித்திர சாதனையைப் படைத்தவர். தற்பொழுது தனது சிறுவயது கிளப்பான வெலிங்டன் பீனிக்ஸ் அணிக்காக விளையாடி வரும் சர்ப்ரீத், நியூசிலாந்து அணியின் நடுகளக் குதிரையாக உலகக் கோப்பையில் வலம் வர உள்ளார்.
ஆஸ்திரேலியா - இலங்கைத் தமிழ் வம்சம்
நிஷான் வேலுப்பிள்ளை
ஆஸ்திரேலியாவின் 'சாக்கரூஸ்' அணியின் 25 வயது அதிரடி விங்கரான நிஷான் வேலுப்பிள்ளை மெல்போர்ன் நகரில் பிறந்தவர். இவருடைய தாய் ஓர் ஆங்கிலோ-இந்தியர், தந்தை இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியர் ஆவார். ஆஸ்திரேலியாவின் ஏ-லீக் (A-League) தொடரில் 'மெல்போர்ன் விக்டரி' அணிக்காக அசுர வேக ஆட்டத்தை வெளிப்படுத்திய இவரை, ஆஸ்திரேலிய தலைமைப் பயிற்சியாளர் டோனி போபோவிக் உலகக் கோப்பை அணிக்குள் கொண்டு வந்துள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டு சீனாவுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கி, சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலியாவின் வெற்றிக் கோலை அடித்து அணியை உலகக் கோப்பைக்குத் தகுதி பெறச் செய்தவர் நிஷான் என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தார் எஸ்சி
கனவை இழந்த நையல் மேசன்
இந்திய வம்சாவளியை கொண்ட மற்றொரு 29 வயது டிஃபெண்டரான நையல் மேசன் (Niall Mason) கத்தார் எஸ்சி அணிக்காக விளையாடி வருகிறார். இங்கிலாந்தில் பிறந்த இவருடைய தாய் இந்தியர், தந்தை அமெரிக்கர் ஆவார். கத்தார் உலகக்கோப்பை அணியின் முதற்கட்ட 34 பேர் கொண்ட பட்டியலில் இடம் பிடித்திருந்த நையல் மேசன், துரதிர்ஷ்டவசமாக இறுதி 26 பேர் கொண்ட அதிகாரப்பூர்வ பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதால் உலகக்கோப்பை கனவை நூலிழப்பில் இழந்துள்ளார்.