CT 2025: ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா vs பாகிஸ்தான் நேருக்கு நேர் புள்ளி விபரம்
செய்தி முன்னோட்டம்
2025 சாம்பியன்ஸ் டிராபியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் இடையேயான மோதல் நாளை (பிப்ரவரி 23) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த மோதல் போட்டியின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள நிலையில் அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்யவும், பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால், இதில் வெல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றன.
இரு அணிகளும் வெற்றிக்கு கடுமையாக போராடும் என்பதால், போட்டி குறித்த எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
நேருக்கு நேர்
முந்தைய நேருக்கு நேர் மோதல் நிலவரம்
வரலாற்று ரீதியாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவை விட முன்னணியில் உள்ளது.
இரு அணிகளும் 135 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி 73 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி 57 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. எஞ்சிய 5 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன.
சாம்பியன்ஸ் டிராபியிலும், பாகிஸ்தான் அணியே முன்னிலை வகிக்கிறது. இதில், இரு அணிகளும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் மூன்றில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.
இருப்பினும், ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் சமீபத்திய சிறப்பான ஆட்டம் காரணமாக, இந்த போட்டியில் வென்று வெற்றி-தோல்வியை சமன் செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.