சாம்பியன்ஸ் டிராபிக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் இந்தியா: ஆதாரங்கள்
சாம்பியன்ஸ் டிராபி 2025, அடுத்த வருடம் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஹைப்ரிட் மாடலில் நடத்தப்படவுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இது 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் தொடராகும். இருப்பினும், போட்டியின் இரண்டு போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெற வாய்ப்புள்ளது. இது குறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் வரைவு அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் சமர்ப்பித்தது. வரைவு அட்டவணையில், பிக்-டிக்கெட் ஆட்டம் உட்பட இந்தியா உடனான போட்டிகள் மார்ச் 1 ஆம் தேதி லாகூரில் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்திய அணியின் பயணம் குறித்து பிசிசிஐ-யிடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
தொடர்ந்து வரும் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல் காரணமாக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல போவதில்லை என இந்திய டுடே செய்தி வெளியிட்டுள்ளது. "சம்பியன்ஸ் டிராபிக்காக அணி பாகிஸ்தானுக்குச் செல்வது சாத்தியமில்லை, ஆனால் இறுதிப் முடிவு மத்திய அரசாங்கத்தால் எடுக்கப்படும். அப்படியானால், ஒரு ஹைபிரிட் மாதிரி உருவாக்கப்படும். இந்தியா தனது போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் விளையாடலாம். ஆசியா கோப்பையைப் போலவே, ஐ.சி.சி.யும் தங்கள் நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்றாலும், எதிர்காலத்தில் இது எப்படி நடக்கும் என்று பார்ப்போம்" என்று ஆதாரம் கூறியதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே முழு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானையும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு செல்வதை தவிர்க்கும் இந்தியா
2012-13 சீசனில் இருந்து இந்தியா பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட்டில் விளையாடவில்லை. 2008ல் இருந்து இந்தியா பாகிஸ்தானுக்குப் பயணம் செய்யவில்லை. கடந்த ஆண்டுதான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடனான இருதரப்பு கிரிக்கெட் உறவை இந்தியா மீண்டும் தொடங்காது என்று முன்னாள் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறினார். இதனால், கடந்த ஆண்டும் ஹைபிரிட் மாடலில் ஆசிய கோப்பையை நடத்த பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இந்தியாவின் போட்டிகள் இலங்கையில் விளையாடப்பட்டன. இந்த தொடரை ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி வென்றது. இது ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன் விளையாடப்பட்டது. இருப்பினும் ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் இந்தியா சென்றது.