சுதந்திர தின ஸ்பெஷல் : 76 ஆண்டுகால வரலாற்றில் விளையாட்டுத் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனைகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா சுதந்திரம் அடைந்து 77வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இந்திய விளையாட்டு வரலாறு, குழு நிகழ்வுகளிலும், தனிப்பட்ட விளையாட்டுகளிலும் புகழ்பெற்ற பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.
ஒலிம்பிக் வெற்றியிலிருந்து உலகக்கோப்பை வெற்றி வரை, விளையாட்டுத் துறையில் சுதந்திர இந்தியாவின் சில முக்கிய தருணங்களை இதில் பார்க்கலாம்.
ஹெல்சின்கி ஒலிம்பிக்கில் முதல் தனிநபர் பதக்கம் வென்ற இந்தியா (1952)
கோலாப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்த கேடி ஜாதவ், ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் பங்கேற்று, வெண்கலம் வென்றார்.
மல்யுத்தத்தில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2000 ஆம் ஆண்டில் அவருக்கு மரணத்திற்குப் பின் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
1975 india won hockey world cup
ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற இந்தியா (1975)
ஒலிம்பிக்கில் ஏழு தங்கப் பதக்கங்களுடன், இந்திய ஹாக்கி அணி நல்ல பின்னணியை கொண்டிருந்தாலும், 1971 முதல், உலகக்கோப்பையில் மூன்றாவது இடமே பிடித்தது.
1973 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இருப்பினும், 1975 ஆம் ஆண்டில், அஜித் பால் சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஹாக்கி உலகக்கோப்பையை முதல்முறையாக வென்றது.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் வென்ற பிரகாஷ் படுகோன் (1980)
1980 ஆம் ஆண்டில், பிரகாஷ் படுகோன், அப்போது பேட்மிண்டன் தொடர்களில் மிகவும் உயர்வாக கருதப்பட்ட ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியரானார்.
அவருக்கு 1972இல் அர்ஜுனா விருதும், 1982இல் பத்மஸ்ரீ விருதும் இந்திய அரசால் வழங்கப்பட்டது.
1983 india won cricket world cup
கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி (1983)
பெரிய நம்பிக்கைகள் ஏதுமின்றி, 1983 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் களமிறங்கிய கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வெல்லும் என இந்தியர்கள் உட்பட யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனால், இறுதிப் போட்டி வரை முன்னேறி, அப்போது பலரும் எதிர்கொள்ள தயங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்தாடி மகுடத்தை கைப்பற்றியது.
ஒலிம்பிக்கில் முதல் தனிநபர் பதக்கம் வென்ற இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி இந்தியா (2000)
சுதந்திரம் பெற்று 53 ஆண்டுகள் ஆன பிறகு, 2000 ஆம் ஆண்டு சிட்னி விளையாட்டுப் போட்டியில், கர்ணம் மல்லேஸ்வரி, 69 கிலோ பளுதூக்குதல் போட்டியில் வெண்கலம் வென்றார்.
அவருக்கு இந்திய அரசால் 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா' விருதும், பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
abhinav bindra won gold in olympics
ஒலிம்பிக்கில் முதல் தனிநபர் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா (2008)
சீனாவில் 2008இல் நடந்த விளையாட்டில், அபினவ் பிந்த்ரா துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம், சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக இந்தியர் ஒருவர், ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்றார்.
மேலும், 1980 ஹாக்கி போட்டிக்குப் பிறகு ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காக பிந்த்ராவுக்கு இந்திய அரசு அர்ஜுனா விருது மற்றும் பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரட்டை பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிவி சிந்து (2021)
2016 ரியோ ஒலிம்பிக்கில், வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, 2021 டோக்கியோ விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றார்.
neeraj chopra first gold in olympic athlet
2021: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா, 2021 டோக்கியோ விளையாட்டுப் போட்டியில், ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று, ஒலிம்பிக் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
2018ஆம் ஆண்டில், இந்திய அரசு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தது. 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், சர்வதேச மட்டத்தில் விளையாட்டுத் துறையில் இந்தியா செல்ல வேண்டிய தூரம் மிக அதிகமாகவே உள்ளது.
தற்போது டாப்ஸ் திட்டத்தின் மூலம், மத்திய அரசு நிதியுதவி வழங்கி வருவதால், சர்வதேச அளவில் பல விளையாட்டு பிரிவுகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ள நிலையில், ஒலிம்பிக்கில் அதிக தங்கப்பதக்கங்களை குவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என நம்பலாம்.