பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு
நியூசிலாந்தில் வியாழக்கிழமை (ஜூலை 20) தொடங்கும் பிபா மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க பல நாட்டு வீராங்கனைகளும் தங்கியிருக்கும் ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் பொதுமக்களில் இரண்டு பேர் பலியாகினர். அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் மற்றும் நார்வே அணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களுக்கு அருகில் வெறும் 300-400 மீட்டர்கள் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் வீராங்கனைகளிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், அணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக பிபா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே, நியூசிலாந்து அரசு இந்த சம்பவத்தால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
முதல்முறையாக 32 அணிகளுடன் பிபா மகளிர் உலகக்கோப்பை
பிபா மகளிர் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக 32 அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் நடந்த கடைசி உலகக்கோப்பை தொடரில் 24அணிகள் மட்டுமே பங்கேற்றிருந்தன. மேலும், இந்த முறை போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள ஒன்பது நகரங்களில் நடக்க உள்ளது. இரண்டு நாடுகள் கூட்டாக மகளிர் உலகக்கோப்பையை நடத்துவதும் இதுவே முதல்முறையாகும். வியாழக்கிழமை நடக்கும் போட்டியின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஆக்லாந்தில் நார்வேயை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில், வியாழக்கிழமை நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி சிட்னியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த முறை உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலிய அணி பார்க்கப்படுகிறது. அதே நேரம், நியூசிலாந்தை பொறுத்தவரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்குகிறது.