இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் 34 வயதான நட்சத்திர பேட்டர் அலெக்ஸ் ஹேல்ஸ், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். கடைசியாக 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடிய அலெக்ஸ் ஹேல்ஸ், இங்கிலாந்து அணி அரையிறுதியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்ததோடு, அதன் அணி பட்டம் வெல்வதற்கும் காரணமாக இருந்தது. அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகஸ்ட் 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானார் மற்றும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 156 போட்டிகளில் பங்கேற்று 5,066 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 2014ல் இலங்கைக்கு எதிராக டி20 போட்டியில் சதம் அடித்து, டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆனார்.
பிரான்சைஸ் லீக் கிரிக்கெட்டில் விளையாட ஓய்வை அறிவித்த அலெக்ஸ் ஹேல்ஸ்
2022 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2023 இல் விளையாடுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வங்கதேசத்திற்கு எதிரான இங்கிலாந்தின் டி20 தொடரில் இருந்து ஹேல்ஸ் விலகியதாக கூறப்படுகிறது. இதனால், பிரான்சைஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காகவே, அவர் 34 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்ற பேச்சு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே, தனது ஓய்வு குறித்து பேசிய அலெக்ஸ் ஹேல்ஸ், "இங்கிலாந்து ஜெர்சியில் நான் இருந்த காலம் முழுவதும், சில உயர்வுகள் மற்றும் தாழ்வுகளையும் அனுபவித்திருக்கிறேன். இங்கிலாந்துக்கான எனது கடைசி ஆட்டமான உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் வென்றதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.