ஜப்பானில் 'துஜூவான்' புயல் எச்சரிக்கை: நெடுஞ்சாலைகள் மூடல்; ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், துஜூவான் தீவிரப் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக குதிரையேற்றப் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, 'துஜூவான்' புயலானது தலைநகர் டோக்கியோவிற்கு கிழக்கே அமைந்துள்ள சிபா மாகாணத்தின் போசோ தீபகற்பப் பகுதியை இன்று மாலை முதல் இரவு வரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு அபாயம் நிலவுவதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி
அய்ச்சி-நகோயாவில் புயலின் தாக்கமும் போட்டி ஒத்திவைப்பும்
புயலின் நேரடித் தாக்கம் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் முதன்மைப் பகுதியான அய்ச்சி-நகோயாவிலும் கடுமையாக எதிரொலித்து வருகிறது.
அப்பகுதியில் இடைவிடாது பெய்து வரும் கனமழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக, இன்று நடைபெறவிருந்த ஆசிய விளையாட்டின் குதிரையேற்றப் போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டு நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
வானிலை சீரடைந்த பின்னரே போட்டிகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக ஜப்பான் சென்றடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியுள்ள பகுதியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
மோசமான வானிலைக்கு மத்தியிலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் குடைகளைப் பிடித்தபடி உற்சாகமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.