ஒருநாள் உலகக்கோப்பையுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு; இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி அறிவிப்பு
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் டேவிட் வில்லி ஒருநாள் உலகக்கோப்பைக்குப் பிறகு ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தங்களை அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு வில்லியின் முடிவு வந்துள்ளது. இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள வில்லிக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்ம், தனது ஓய்வு குறித்து பேசியுள்ள வில்லி, "இந்த நாள் வருவதை நான் ஒருபோதும் விரும்பவில்லை. சிறுவயதில் இருந்து நான் இங்கிலாந்துக்காக விளையாடுவதை மட்டுமே கனவு கண்டேன். எனவே, கவனமாக சிந்தித்து, பரிசீலித்து, உலகக்கோப்பையின் முடிவில் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது என்று நான் மிகவும் வருத்தத்துடன் உணர்கிறேன்." என்று கூறினார்.
டேவிட் வில்லியின் கிரிக்கெட் புள்ளிவிபரங்கள்
இடது கை வேகப்பந்து வீச்சாளரான டேவிட் வில்லி 2015 இல் இங்கிலாந்தில் அறிமுகமானதில் இருந்து 70 ஒருநாள் மற்றும் 43 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 70 ஒருநாள் போட்டிகளில், வில்லி 30.34 சராசரியுடன் 94 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். இதில் நான்குமுறை நான்கு விக்கெட்டுகளையும் ஒரு முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி, 5/30 என்ற சிறந்த பந்துவீச்சை கொண்டுள்ளார். 43 டி20 போட்டிகளில், வில்லி 23.13 சராசரியில் 51 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டி20 போட்டிகளில் 50க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, தற்போது நடந்து வரும் உலகக்கோப்பையில் மூன்று போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.