
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா கூட்டாக நடத்தும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை: மைதானங்களின் பட்டியல் வெளியானது
செய்தி முன்னோட்டம்
2027 ஒருநாள் உலகக்கோப்பையை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. இந்த தொடருக்கான மைதானங்களை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 54 போட்டிகளில், 44 போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெறும். மீதமுள்ள 10 போட்டிகள் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறும். தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியா, கேப் டவுன், டர்பன், குபெர்ஹா, ப்ளூம்ஃபோன்டைன், கிழக்கு லண்டன் மற்றும் பார்ல் ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். இந்த உலகக் கோப்பை 2003 ஆம் ஆண்டு வடிவத்திற்குத் திரும்புகிறது. இதில் 14 அணிகள் பங்கேற்கும். அவை தலா ஏழு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும்.
சூப்பர் சிக்ஸ்
சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குப் பிறகு அரையிறுதி
ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குத் தகுதி பெறும், அதைத் தொடர்ந்து அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும். தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே போட்டியை நடத்துவதன் மூலம் அவை நேரடியாக தகுதி பெறுகின்றன. நமீபியாவைப் பொறுத்தவரை, அது முழு ஐசிசி உறுப்பினர் நாடு இல்லாததால் தகுதிச் சுற்றில் பங்கேற்க வேண்டும். மேலும், 2027 மார்ச் 31 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் எட்டு இடங்களைப் பிடிக்கும் அணிகளும், மீதமுள்ள அணிகள் தகுதிச் சுற்று மூலமும் தேர்வு செய்யப்படும். இந்த அறிவிப்பு உள்ளூர் அமைப்புக் குழுவின் (LOCA) உருவாக்கத்துடன் வெளியிடப்பட்டது. இந்த குழுவுக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ட்ரெவர் மானுவல் தலைமை தாங்குகிறார்.