ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 19 சதங்களை அடித்து பாபர் அசாம் சாதனை
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார். முல்தானில் நேபாளத்திற்கு எதிரான 2023 ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 25/2 என பாகிஸ்தான் அணி தடுமாறியபோது பாபர் களமிறங்கி அணியை காப்பாற்றினார். அவர் முகமது ரிஸ்வான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோருடன் இணைந்து அணியை மீட்டெடுத்தார். பாபர் இந்த போட்டியில் 151 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 19வது சதத்தை விளாசியுள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 19 சதங்களை எட்டிய வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
102 இன்னிங்ஸ்களில் 19வது சதத்தை எட்டிய பாபர் அசாம்
ஒருநாள் கிரிக்கெட்டில் 104 இன்னிங்ஸ்களில் 19 சதம் விளாசிய தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹஷிம் ஆம்லா இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பாபர் அசாம் இந்த சாதனையை முறியடித்துள்ளார். பாபர் அசாம் 102 ரன்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். பாபர் தனது 18வது சதத்தை கடந்த மே மாதம் அடித்திருந்த நிலையில், மூன்று மாதம் கழித்து 19வது சதத்தை எட்டியுள்ளார். இதற்கிடையே, குறைந்தபட்சம் 2,000 ரன்கள் எடுத்த பேட்டர்களில் பாபரின் சராசரி 59க்கும் மேல் உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் விராட் கோலி (57.32) பாபருக்கு அடுத்த இடத்தில் (57.32) உள்ளார். இவர்கள் இருவரைத் தவிர வேறு எந்த பேட்டருக்கும் சராசரி 54 அல்லது அதற்கு மேல் இல்லை.