ஆசிய விளையாட்டு 2026: 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் 5-வது இடம்; ஏமாற்றமளித்த இந்திய மகளிர் அணி
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்திய மகளிர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனைகள் தனிநபர் மற்றும் குழு பிரிவுகளில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் இறுதிச் சுற்றில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர் 181.1 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்து வெளியேறினார். இப்போட்டியில் தென் கொரியாவின் சூ கேயுன் 246.3 புள்ளிகள் குவித்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். சீனாவின் ஷென் யியாவ் (241.3) வெள்ளியும், ஜியாங் ரான்சின் (221.6) வெண்கலமும் வென்றனர்.
பதக்கம்
குழு பிரிவிலும் நழுவிய பதக்கம்
தனிநபர் பிரிவில் மனு பாக்கர் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற நிலையில், அவருடன் களமிறங்கிய முன்னணி வீராங்கனைகளான இஷா சிங் மற்றும் சுருச்சி சிங் ஆகியோர் இறுதிப் போட்டிக்குக் கூட முன்னேற முடியாமல் ஏமாற்றமளித்தனர்.
இதனால் இந்தியாவின் உறுதி செய்யப்பட்ட பதக்கமாகக் கருதப்பட்ட மகளிர் குழு பிரிவிலும் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்திய மகளிர் அணி தகுதிச் சுற்றில் ஒட்டுமொத்தமாக 4-வது இடத்தையே பிடித்தது.
வியட்நாம், தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துப் பதக்கங்களை அள்ளின.
முந்தைய ஹாங்சோ ஆசிய விளையாட்டில் இப்பிரிவில் தனிநபர் தங்கம், வெள்ளி மற்றும் குழு வெள்ளி வென்றிருந்த நிலையில், இம்முறை இந்தியா பதக்கமின்றி வெளியேறியுள்ளது.
போராட்டம்
இறுதிப் போட்டியில் மனு பாக்கரின் கடும் போராட்டம்
தகுதிச் சுற்றில் 579 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய மனு பாக்கர், இறுதிப் போட்டியில் சற்று மந்தமாகவே தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டு வெளியேறும் விளிம்பிற்குச் சென்ற அவர், அழுத்தங்களுக்கு மத்தியில் அபாரமாக 10.8 புள்ளிகளைச் சுட்டு 5-வது இடத்திற்கு முன்னேறினார்.
பின்னர் மீண்டும் ஒரு 10.8 புள்ளியைப் பதிவு செய்து சுற்றுகளின் முடிவில் வெண்கலப் பதக்க நிலைக்கு இணையாக முன்னேறினார்.
எனினும், அடுத்த ஷாட்டில் அவர் 9.6 புள்ளிகள் மட்டுமே பெற்றதால் மீண்டும் சறுக்கலைச் சந்தித்து, 5-வது இடத்தைப் பிடித்துத் தனது பதக்க வேட்டையை முடித்துக் கொண்டார்.
25 மீட்டர் பிரிவில் அடுத்த வாய்ப்பு
இஷா சிங், சுருச்சி சிங் சறுக்கல்
நடப்பு ஆண்டில் முனிச் உலகக் கோப்பையில் உலக சாதனையுடன் கலக்கிய உலகத் தரவரிசை 2-ம் நிலை வீராங்கனையான இஷா சிங், தகுதிச் சுற்றில் 572 புள்ளிகளுடன் 15-வது இடத்தைப் பிடித்து அதிர்ச்சியளித்தார்.
அதேபோல் உலகக் கோப்பை சாம்பியனான 20 வயதான இளம் புயல் சுருச்சி சிங் 568 புள்ளிகளுடன் 26-வது இடத்தைப் பிடித்தார்.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கங்களை இழந்த போதிலும், மனு பாக்கர் மற்றும் இஷா சிங் ஆகியோர் மூத்த வீராங்கனை ரஹி சர்னோபத்துடன் இணைந்து அடுத்து நடைபெறவுள்ள 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் போட்டியிட்டுப் பதக்கம் வெல்லும் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.