ஆசிய விளையாட்டுப் போட்டி : சீனாவின் உலக சாதனையை முறியடித்தது இந்திய துப்பாக்கிச் சுடுதல் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் ஆடவர் பிரிவில் இந்திய அணி திங்களன்று (செப்டம்பர் 25) தங்கம் வென்று சாதனை படைத்தது. உலக சாம்பியன் ருத்ராங்க்ஷ் பாட்டீல், ஒலிம்பியன் திவ்யான்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகிய மூவர் அடங்கிய இந்திய அணி முன்னதாக தகுதிச் சுற்றில் மொத்தம் 1,893.7 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில் முறையே ருத்ராங்க்ஷ் 632.5, தோமர் 631.6 மற்றும் பன்வார் 629.6 புள்ளிகளை எடுத்தனர். இதன்மூலம், ஒரு மாதத்திற்கு முன்பு அஜர்பைஜானின் பாகுவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 1,893.3 என்ற புள்ளிகளுடன் சீனர்கள் படைத்த முந்தைய உலக சாதனையை முறியடித்தனர்.
தங்கம் வென்ற இந்திய அணி
தகுதிச் சுற்றில் முதலிடம் பிடித்த இந்திய அணி, இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஹாங்சோவில் இந்தியா வென்ற முதல் தங்கம் இதுவாகும். இதற்கிடையே, இந்த போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து தென்கொரியா வெள்ளியும், மூன்றாம் இடம் பிடித்த சீனா வெண்கலமும் வென்றது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஆறு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 28 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கலத்துடன் சீனா பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், தென்கொரியா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் உள்ளன.