'ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து வெளியேறுவோம்' : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது எனது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தலைவர் நஜாம் சேத்தி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து விலகுவோம் என மிரட்டியுள்ளார். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகளை நடுநிலை மைதானங்களிலும், இதர போட்டிகளை பாகிஸ்தானிலும் நடத்த பிசிபி ஹைபிரிட் மாடலை முன்மொழிந்தது. ஆனால் இதற்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் உள்ள நாடுகள் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் போட்டியை வேறு நாட்டுக்கு குறிப்பாக இலங்கைக்கு இடமாற்றம் செய்யலாம் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆலோசித்து வருகிறது.
மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி
பாகிஸ்தானிலிருந்து ஆசிய கோப்பை போட்டியை வேறு நாட்டுக்கு இடமாற்றினாலும், குறைந்தபட்சம் 4 முதல் சுற்று போட்டிகளையாவது தங்கள் நாட்டில் நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி வலியுறுத்தி உள்ளார். தங்கள் நாட்டில் நான்கு போட்டிகள் மட்டும் நடத்தி விட்டு இதர போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடலாம் என அவர் முன்மொழிந்துள்ளார். எனினும் செப்டெம்பரில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என்பதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாட உறுப்பு நாடுகள் மறுத்துவிட்டன. இதற்கிடையே தங்கள் பரிந்துரையை ஏற்க மறுத்து போட்டியை முழுமையாக வேறு நாட்டுக்கு மாற்றினால், தாங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்தே வெளியேறுவோம் என நஜாம் சேத்தி எச்சரித்துள்ளார்.