வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்க குடியுரிமையுடன் மேஜர் லீக் கிரிக்கெட்டுக்கு இடம் பெயர்ந்த 5 இந்திய வீரர்கள்
மேஜர் லீக் கிரிக்கெட் (எம்எல்சி) 2023 தொடர் வெள்ளிக்கிழமை (ஜூலை 14) டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான மோதலுடன் தொடங்கியது. இவை தவிர எம்ஐ நியூயார்க், சியாட்டில் ஓர்காஸ், வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் என மொத்தம் ஆறு அணிகள் இதில் போட்டியிடுகின்றன. ஐபிஎல் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்த்திய புரட்சியை போல, எம்எல்சி 2023 அமெரிக்க கிரிக்கெட்டிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுவாரஸ்யமாக, இந்திய வீரர்களாக ஐபிஎல்லில் விளையாடிய சில முன்னாள் வீரர்கள், மேஜர் லீக் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்கர்களாக இணைந்துள்ளனர். அவர்களின் பட்டியலை இதில் பார்க்கலாம்.
மேஜர் லீக் கிரிக்கெட்டில் விளையாடும் இந்திய அமெரிக்கர்கள்
யு-19 உலகக்கோப்பை வென்ற கேப்டன் உன்முக்த் சந்த் ஐபிஎல்லில் உள்ளூர் வீரராக விளையாடினாலும், 2016க்குப் பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் அமெரிக்க குடிமகனாகி லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக அறிமுகமானார். உன்முக்த் சந்தின் உலகக்கோப்பை வென்ற அணியில் இருந்த ஹர்மீத் சிங், ஐபிஎல்லில் ஒரே ஒரு போட்டியில் விளையாடிய பிறகு வாய்ப்பு கிடைக்காததால், அமெரிக்க குடிமகனாகி சியாட்டில் ஓர்காஸில் சேர்ந்துள்ளார். சரப்ஜித் லட்டா 2010 முதல் 2016 வரை ஒன்பது ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய பிறகு, இப்போது எம்ஐ நியூயார்க் அணியில் அமெரிக்கராக விளையாட உள்ளார். தஜிந்தர் சிங் தில்லான் மற்றும் சைதன்யா பிஷ்னோய் ஐபிஎல்லில் இடம்பெற்றாலும் விளையாட வாய்ப்பு கிடைக்காததால், அமெரிக்க குடிமகனாகி சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடுகின்றனர்.