ஒருநாள் உலகக்கோப்பைக்கு முன் திடீரென ஓய்வை அறிவித்த வங்கதேச கேப்டன் தமீம் இக்பால்
ஒருநாள் கிரிக்கெட்டில் வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்படும் தமீம் இக்பால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். மேலும் கடைசியாக ஏப்ரல் மாதம் ஒரு டெஸ்டில் விளையாடினார். தற்போது வங்கதேசம் ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் ஆடி வரும் நிலையில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தமீம் ஜொலிக்க முடியாத நிலையில் தொடக்க ஆட்டத்தில் அந்த அணி தோற்றது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூலை 6) திடீரென செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்த தமீம் இக்பால், மிகவும் உணர்ச்சிவசமாக காணப்பட்டதோடு, ஓய்வை அறிவித்தார்.
தமீம் இக்பால் பேட்டியின் முழு விபரம்
தமீம் இக்பால் தனது பேட்டியில், "இதுவே எனக்கான முடிவு. என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன். இந்த தருணத்தில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எனது அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், பிசிபி அதிகாரிகள், எனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி." என்று தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் ஒருநாள் உலகக்கோப்பை நடக்க உள்ள நிலையில், அவர் திடீரென விலகியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேச டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷாகிப் அல் ஹசன் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ள லிட்டன் தாஸ் ஆகிய இருவரில் ஒருவரை ஒருநாள் உலகக்கோப்பை வரை கேப்டனாக நியமிக்க வங்கதேசம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.