Loading...
விண்ணில் ஏவப்பட்ட 10 நிமிடங்களில் தோல்வியடைந்த ULA வல்கன் ராக்கெட்: 40 அமேசான் இணைய செயற்கைக்கோள்கள் அழிவு
40 அமேசான் இணைய செயற்கைக்கோள்கள் அழிவு

விண்ணில் ஏவப்பட்ட 10 நிமிடங்களில் தோல்வியடைந்த ULA வல்கன் ராக்கெட்: 40 அமேசான் இணைய செயற்கைக்கோள்கள் அழிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 16, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி தளத்திலிருந்து நவம்பர் 15 அன்று ஏவப்பட்ட யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் (ULA) நிறுவனத்தின் வல்கன் ராக்கெட், பத்து நிமிடங்களிலேயே கோளாறு ஏற்பட்டு தோல்வியடைந்தது. இதனால் அதிலிருந்த அமேசான் நிறுவனத்தின் 40 அமேசான் லியோ (Amazon Leo) இணைய செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையை அடையாமல் அழிந்தன. போயிங் மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் இணைந்து 2006 ஆம் ஆண்டு ULA நிறுவனத்தைத் தொடங்கிய பிறகு ஏற்பட்டுள்ள முதல் முழுமையான தோல்வி இதுவாகும்.

கோளாறு

BE-4 என்ஜின் கூடுதல் நேரம் எரிந்ததாலும் Centaur பிரிவு தாமதத்தாலும் ஏற்பட்ட கோளாறு

வல்கன் ராக்கெட்டின் ஐந்தாவது பயணமான இதில், ஏவப்பட்ட ஒரு நிமிடம் நாற்பது வினாடிகளில் ஆறு திட எரிபொருள் பூஸ்டர்களும் சீராக பிரிந்து சென்றன.

ஆனால் அதன் பிறகு மையப் பகுதியில் உள்ள இரண்டு BE-4 என்ஜின்கள் திட்டமிட்டதை விட அதிக நேரம் எரிந்ததை தொடர்ந்து, மேல் நிலை 'சென்டார்' (Centaur) பிரிவது தாமதமானது.

பின்னர் சென்டார் நிலை வழக்கத்திற்கு மாறான திசை மாற்றங்களை மேற்கொண்ட நிலையில் ராக்கெட்டுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

கிராவிட்டி லாஸ்

கிராவிட்டி லாஸ் மற்றும் என்ஜின் வால்வு மாற்றத்தின் அறிவியல் பின்னணி

ஒரு செயற்கைக்கோள் புவியின் தாழ்வட்டப் பாதையில் நிலைத்திருக்க மணிக்கு 28,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும்.

முதல் நிலை குறைந்த உந்துதலை அளித்தால், ராக்கெட் புவியீர்ப்பு விசையை எதிர்த்து மேலேறுவதிலேயே அதிக நேரத்தை செலவிடும்.

இதனை பொறியாளர்கள் 'கிராவிட்டி லாஸ்' (Gravity Loss) என்கின்றனர்.

மேலும் ப்ளூ ஆரிஜின் தயாரித்த BE-4 என்ஜின்களில் மே மாதம் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து ஆக்சிஜன் வால்வுகள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு நடந்த முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ஸ்டார்லிங்க்

ஸ்டார்லிங்க் போட்டித் திட்டமான அமேசான் லியோவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு

முன்னதாக 'புராஜெக்ட் கைப்பர்' (Project Kuiper) என அழைக்கப்பட்ட அமேசான் லியோ திட்டம், எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் போட்டியாக 3,200-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தும் இலக்கைக் கொண்டுள்ளது.

இதுவரை சுமார் 400 செயற்கைக்கோள்கள் மட்டுமே விண்ணுக்கு சென்றுள்ள நிலையில், ULA-வுடன் அமேசான் முன்பதிவு செய்திருந்த 38 வல்கன் ராக்கெட் பயணங்களில் முதல் பயணமே தோல்வியடைந்துள்ளது.

தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து விரைவில் மீண்டும் விண்ணில் பாய்வோம் என ULA தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT