
புதிய சிஇஓ-வை நியமித்த ஓபன்ஏஐ; மைக்ரோசாஃப்டில் இணைந்த சாம் ஆல்ட்மேன்!
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணியில் செயல்பட்டு வரும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகச் செயல்பட்டு வந்த சாம் ஆல்ட்மேனை திடீரென அந்தப் பதவியில் இருந்து நீக்கியது ஓபன்ஏஐ நிறுவனத்தின் இயக்குநர் குழு.
உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப மேம்பாட்டினை முன்னின்று நடத்திச் செல்லும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் முகமான சாம் ஆல்ட்மேன் திடீரென நீக்கம் செய்யப்பட்டது தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், சாம் ஆல்ட்மேனின் பதவி நீக்கத்தைத் சொடர்ந்து ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வந்த க்ரெக் ப்ராக்மேன் உட்பட பல்வேறு முக்கிய ஊழியர்களும் அந்நிறுவனத்திலிருந்து வெளியறினர்.
தொடர்ந்து ஏற்பட்ட குழப்பங்களுக்கிடையே சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்க கோரினர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள்.
சாம் ஆல்ட்மேன்
மைக்ரோசாஃப்டில் இணைந்த சாம் ஆல்ட்மேன்:
சாம் ஆல்ட்மேனை மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேன் இணைந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார் மைக்ரோசாஃப்ட் சிஈஓ சத்யா நாதெல்லா.
சாம் ஆல்ட்மேன் மட்டுமின்றி, ஓபன்ஏஐ நிறுவனத்திலிருந்து வெளியேறிய அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் க்ரெக் ப்ராக்மேன் உட்பட அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிய பல்வேறு ஊழியர்களும் தற்போது மைக்ரோசாஃப்டில் இணைந்திருக்கின்றனர்.
இது குறித்த தகவலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்யா நாதெல்லா.
ஓபன்ஏஐ நிறுவத்திலிருந்து மைக்ரோசாஃப்டில் இணைந்த அனைவரும், அந்த நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவை முன்னெடுத்துச் செல்லவிருப்பதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் சத்யா நாதெல்லா.
ஓபன்ஏஐ
ஓபன்ஏஐ நிறுவனத்தின் புதிய சிஇஓ:
ஓபன்ஏஐ நிறுவனத்தில் சாம் ஆல்ட்மேனின் பதவி விலகலைத் தொடர்ந்து, இடைப்பட்ட தலைமை செயல் அதிகாரியாக அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமிக்கப்பட்ட மிரா முராட்டி அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அமேசான் நிறுவனத்தின் கேம் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்டச்சின் (Twitch) தலைமை செயல் அதிகாரியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் செயல்பட்டு வந்த எம்மட் ஷியரை தங்களது புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்திருக்கிறது ஓபன்ஏஐ நிறுவனம்.
புதிய தலைமையின் கீழான ஓபன்ஏஐ நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவது குறித்து, ஓபன்ஏஐ நிறுவனத்துடனான தங்களது கூட்டணியில் நம்பிக்கை இருப்பதாகவும் மேற்கூறிய எக்ஸ் பதிவில் சத்யா நாதெல்லா குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
சத்யா நாதெல்லாவின் எக்ஸ் பதிவு:
We remain committed to our partnership with OpenAI and have confidence in our product roadmap, our ability to continue to innovate with everything we announced at Microsoft Ignite, and in continuing to support our customers and partners. We look forward to getting to know Emmett…
— Satya Nadella (@satyanadella) November 20, 2023