எதிர்காலத்தில் விண்வெளி வீரர்கள் தங்க, 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு நிலவில் குகை கண்டுபிடிப்பு
இத்தாலியில் உள்ள ட்ரெண்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லோரென்சோ புரூசோன் மற்றும் லியோனார்டோ கேரர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, நிலவின் மேற்பரப்பில் கணிசமான அளவு குகைகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அரை நூற்றாண்டுக்கு முன்பு அப்பல்லோ 11 விண்வெளி வீரர்கள் முதன்முதலில் தரையிறங்கிய மேரே டிரான்குவிலிடாடிஸ் (அமைதியின் கடல்) இல் உள்ள திறந்த வெளியிலிருந்து இந்த குகைகளை அணுக முடியும். நாசாவின் லூனார் ரீகனைசென்ஸ் ஆர்பிட்டர் (எல்ஆர்ஓ) சேகரித்த ரேடார் தரவுகளின்படி, கண்டறியப்பட்ட முதல் குகை 45 மீ அகலமும் 80 மீ நீளமும் கொண்டது. இது 14 டென்னிஸ் மைதானங்களின் பரப்பளவிற்கு சமம்.
நிலவு குகைகள்: எதிர்கால நிலவு பயணங்களுக்கான இயற்கை தங்குமிடங்கள்
கண்டுபிடிக்கப்பட்ட குகை மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எரிமலை செயல்முறைகள் மூலம் உருவான வெற்று எரிமலைக்குழாயாக இருக்கலாம் என்று ப்ரூஸோன் மற்றும் கேரர் நம்புகின்றனர். இந்த நிலத்தடி கட்டமைப்புகள் காஸ்மிக் கதிர்கள், சூரிய கதிர்வீச்சு மற்றும் நுண்ணிய விண்கற்களுக்கு எதிராக இயற்கையான தங்குமிடங்களை வழங்க முடியும். குகைகளின் முக்கிய நன்மை என்னவென்றால், அவை சிக்கலான கட்டுமான நடவடிக்கைகள் தேவையில்லாமல் சாத்தியமான மனித தளத்தின் முக்கிய கட்டமைப்பு பகுதிகளை வழங்குவதாகும் என்று கேரர் கூறினார். இந்த குகைகளுக்குள், வெப்பநிலை ஒப்பீட்டளவில் நிலையானதாக இருக்கும் எனவும், இதனால் அவை மனிதர்கள் வாழ ஏற்றதாக அமைகிறது.
நிலவு குகைகள்: புவியியல் தகவல்களின் புதையல்
இந்த நிலவு குகைகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் அவை சந்திரனின் உருவாக்கம் மற்றும் எரிமலை வரலாறு பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கக்கூடும். குகைகளில் நீர் பனிக்கட்டியும் இருக்கலாம். இது நீண்ட கால சந்திர பயணங்கள் மற்றும் காலனித்துவத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாகும். சந்திரனில் இதுபோல 200க்கும் மேற்பட்ட குழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பல நிலத்தடி எரிமலைக்குழாய்களுக்கு நுழைவாயிலாக இருக்கலாம். இருப்பினும், இந்த குகைகளை அணுகுவது அவற்றின் ஆழம் மற்றும் நுழைவாயிலைச் சுற்றியுள்ள தளர்வான குப்பைகள் காரணமாக ஒரு குறிப்பிடத்தக்க சவாலை அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர் ராபர்ட் வாக்னர் கூறுகிறார்.
நிலவின் வசிப்பிடத்திற்கான தயாரிப்பு: சவால்கள் மற்றும் பரிசீலனைகள்
மனிதர்கள் சந்திரனுக்குத் திரும்பத் தயாராகும்போது, இந்தக் குகைகளின் கட்டமைப்பு நிலைத்தன்மையை எவ்வாறு மதிப்பிடுவது மற்றும் அவற்றின் சுவர்கள் மற்றும் கூரைகளை வலுப்படுத்துவது எப்படி என்பதை விண்வெளி நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன. எதிர்கால சந்திர வாழ்விடங்களுக்கு இயக்கம் அல்லது நில அதிர்வு செயல்பாடு குறித்து எச்சரிக்க கண்காணிப்பு அமைப்புகள் தேவைப்படலாம். குகை இடிந்து விழுந்தால் விண்வெளி வீரர்கள் பின்வாங்குவதற்கு தனி பகுதிகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.