Loading...
பூமியிலிருந்து 'ஒரு ஒளி-நாள்' தொலைவைக் கடந்து நாசாவின் Voyager 1 விண்கலம் மைல்கல் சாதனை
நாசாவின் Voyager 1 விண்கலம் மைல்கல் சாதனை

பூமியிலிருந்து 'ஒரு ஒளி-நாள்' தொலைவைக் கடந்து நாசாவின் Voyager 1 விண்கலம் மைல்கல் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
05:56 pm

செய்தி முன்னோட்டம்

பூமியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டு சுமார் 49 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் 'வாயேஜர்-1' விண்கலம் மனிதகுல வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி நவம்பர் 18-ஆம் தேதி பிற்பகல் 3:46 மணிக்கு, பூமியிலிருந்து 'ஒரு ஒளி-நாள்' தொலைவை கடந்த முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் என்ற பெருமையை வாயேஜர்-1 பெற்றுள்ளது. தற்போது இது பூமியிலிருந்து சுமார் 25.9 பில்லியன் (2,590 கோடி) கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

பயணம்

49 ஆண்டுகள் பயணம்

வினாடிக்குச் சுமார் 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒளியானது, 24 மணி நேரத்தில் (ஒரு நாளில்) கடக்கும் தூரமே 'ஒரு ஒளி-நாள்' எனப்படுகிறது.

மணிக்குச் சுமார் 61,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் வாயேஜர்-1 விண்கலத்திற்கு, ஒளி ஒரு நாளில் கடக்கும் இந்தத் தூரத்தை அடைய ஏறத்தாழ 5 தசாப்தங்கள் (49 ஆண்டுகள்) தேவைப்பட்டுள்ளன.

இந்த மைல்கல்லின்படி, பூமியிலிருந்து வாயேஜர்-1 விண்கலத்திற்கு அனுப்பப்படும் ரேடியோ சிக்னல் அங்கு சென்றடைய சுமார் 24 மணி நேரமும், அங்கிருந்து பதில் சிக்னல் பூமிக்கு திரும்பி வர மேலும் 24 மணி நேரமும் ஆகும்.

அதாவது, ஒரு சாதாரணத் தகவல் பரிமாற்றத்திற்கே மொத்தம் 48 மணி நேரம் (2 நாட்கள்) ஆகிறது.

தொழில்நுட்பம்

1977-ல் தொடங்கிய விண்வெளிப் பயணம் & 1970-களின் தொழில்நுட்பம்

1977 செப்டம்பர் 5-ஆம் தேதி ஏவப்பட்ட வாயேஜர்-1, 1979-ல் வியாழன் கோளையும், 1980-ல் சனி கோளையும் கடந்து அரிய புகைப்படங்களை அனுப்பியது.

2012 ஆகஸ்ட் மாதம் சூரிய குடும்பத்தின் எல்லையான 'ஹீலியோபாஸ்' பகுதியைக் கடந்து, விண்மீன்களுக்கு இடையிலான வெளியை அடைந்த முதல் விண்கலம் என்ற சாதனையையும் படைத்தது.

சூரிய ஒளியே இல்லாத ஆழமான விண்வெளியில் பயணிப்பதால், இதில் சோலார் பேனல்கள் இல்லை.

அதற்கு பதிலாக புளூட்டோனியம்-238 கதிரியக்க சிதைவிலிருந்து வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பத்தில் இது இயங்குகிறது.

மின்சாரம் படிப்படியாகக் குறைந்து வருவதால், அத்தியாவசியமற்ற கருவிகளை அணைத்துவிட்டு, 1970-களில் உருவாக்கப்பட்ட கணினி மற்றும் மெமரி அமைப்புகளைக் கொண்டே 2030-களின் நடுப்பகுதி வரை இவ்விண்கலத்தை இயக்க நாசா பொறியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

கோல்டன் ரெக்கார்ட்

பூமியின் செய்தியை சுமந்து செல்லும் 'கோல்டன் ரெக்கார்ட்'

ஒரு ஒளி-நாள் தூரத்தை கடந்தாலும், நமது சூரிய குடும்பத்திற்கு மிக அருகில் உள்ள 'ஆல்பா சென்டாரி' நட்சத்திரக் கூட்டம் 4 ஒளி-ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.

வாயேஜர்-1 தற்போது 'கிளீஸ் 445' என்ற நட்சத்திரத்தை நோக்கிப் பயணிக்கிறது; சுமார் 40,000 ஆண்டுகளுக்கு பிறகே அந்த நட்சத்திரத்திற்கு 1.7 ஒளி-ஆண்டுகள் அருகில் இது செல்லும்.

வேற்றுகிரகவாசிகள் யாரேனும் எதிர்காலத்தில் இவ்விண்கலத்தை கண்டறிந்தால் பூமியை பற்றி தெரிந்துகொள்வதற்காக, பூமியின் ஒலிகள், இசை, பல்வேறு மொழிகளின் வாழ்த்துக்கள் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய 'கோல்டன் ரெக்கார்ட்' இதில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT