ஒருநாளுக்கு 25 மணி நேரம் ஆகுமா? பூமியிலிருந்து சந்திரன் விலகிச் செல்வதால் ஏற்படும் மாற்றம்
விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், பூமியிலிருந்து நிலவு படிப்படியாக விலகிச் செல்வது தெரிய வந்துள்ளது. இது இறுதியில் நமது கிரகத்தில் ஒரு நாளுக்கான நேரத்தை 25 மணிநேரமாக நீட்டிக்கக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து சந்திரன் ஆண்டுக்கு 3.8 சென்டிமீட்டர் என்ற விகிதத்தில் விலகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வு சுமார் 200 மில்லியன் ஆண்டுகளில் பூமி நாட்களில் ஒரு மணி நேரம் நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் மேலும், சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் சுமார் 18 மணி நேரம் மட்டுமே இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது படிப்படியாக விலகி தற்போது 24 மணி நேரத்திற்கு வந்துள்ளது.
சந்திரன் விலகிச் செல்வதால் ஏற்படும் விளைவுகள்
சந்திரனின் விலகல் பூமியில் சுழற்சி, காலநிலை மாற்றம், கண்ட இடப்பெயர்ச்சி போன்ற பல விளைவுகளுக்கு காரணமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பண்டைய புவியியல் அமைப்புகளையும், வண்டல் அடுக்குகளையும் ஆய்வு செய்து இந்த முடிவு பெறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் முதன்மையான காரணம் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசை தொடர்புகள் என்று நம்பப்படுகிறது. அதேநேரத்தில் சந்திரனின் தற்போதைய விலகல் விகிதம் ஒப்பீட்டளவில் நிலையாக உள்ளதாக கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்த சோதனையை மேற்கொண்ட பேராசிரியர் மேயர் கூறுகையில், கடந்த காலங்களில் நேரத்தைக் கூறுவதற்கு வானியல் முறையை பயன்படுத்துவதன் அவசியத்தை குறிப்பிட்டதோடு, இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள பில்லியன் கணக்கான ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆராய்ச்சி செய்ய விரும்புவதாகக் கூறினார்.