Loading...
AI மூலம் 10 ஆண்டில் புற்றுநோய், அல்சைமர்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடியின் கணிப்பு
ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடி

AI மூலம் 10 ஆண்டில் புற்றுநோய், அல்சைமர்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படுமா? ஆந்த்ரோபிக் CEO டேரியோ அமோடியின் கணிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 11, 2026
05:40 pm

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்த ஒரு யுகத்திற்குள் புற்றுநோய் மற்றும் அல்சைமர் போன்ற குணப்படுத்த முடியாத கொடிய நோய்களுக்கு தீர்வு காண முடியும் என ஏஐ நிறுவனமான ஆந்த்ரோபிக் தலைமை நிர்வாக அதிகாரி டேரியோ அமோடி கணிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், ஏஐ-யின் தற்போதைய திறனைக் கொண்டு இது சாத்தியமில்லை என்று கூறி மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இதற்கு தீவிர எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

நம்பிக்கை

"அதிசயங்களின் காலம் மலரும்"

ஏஐ தொழில்நுட்பம் மருந்து கண்டுபிடிப்புத் துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று நம்பும் டேரியோ அமோடி கூறுகையில், "நாம் இதனைச் சரியாகச் செய்தால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதகுலத்திற்குச் சவாலாக இருந்த பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடிய 'அசாதாரண அதிசயங்களின் காலத்தை' நம்மால் உருவாக்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

இவரது இந்த கருத்தை எலான் மஸ்க் மற்றும் கூகுளின் டெமிஸ் ஹசாபிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்பத் தலைவர்களும் ஆமோதித்துள்ளனர்.

நிபுணர்களின் வாதம்

மருந்து நிறுவனங்களின் அதிருப்தி

தொழில்நுட்ப தலைவர்களின் இந்த கருத்துக்களுக்கு பல முன்னணி மருந்து நிறுவனங்களின் தலைவர்களும், மருத்துவ நிபுணர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வெர்டெக்ஸ் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் லீடன், இந்த காலக்கெடுவை கடுமையாக விமர்சித்துள்ளார். தாங்கள் சுமார் 10,000 மருந்து சேர்மங்களை 50 ஏஐ நிறுவனங்களைக் கொண்டு பரிசோதித்ததாகவும், எங்குமே ஏஐ மூலம் தாமாகவே ஒரு முழுமையான மருந்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆரம்பக்கட்ட மூலக்கூறு கண்டுபிடிப்புகளை ஏஐ துரிதப்படுத்தினாலும், 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீடிக்கும் மருத்துவப் பரிசோதனைகள், விலங்கு மற்றும் மனித மாதிரிகளிலான சோதனைகள் போன்ற நீண்ட செயல்முறைகளை ஏஐ-ஆல் குறுக்க முடியாது.

இத்தகைய அதீத நம்பிக்கைகள் பொதுமக்களிடையே தவறான எதிர்பார்ப்புகளை மட்டுமே உருவாக்கும் என எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT