Loading...
101 மணி நேரம் இடைவிடாமல் 5,700 கி.மீ பறந்த அமூர் வல்லூறு: இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்ற பறவையின் வியப்பூட்டும் சாதனை
101 மணி நேரம் இடைவிடாமல் 5,700 கி.மீ பறந்த அமூர் வல்லூறு

101 மணி நேரம் இடைவிடாமல் 5,700 கி.மீ பறந்த அமூர் வல்லூறு: இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்கா சென்ற பறவையின் வியப்பூட்டும் சாதனை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 23, 2026
03:03 pm

செய்தி முன்னோட்டம்

இயற்கையின் வியப்பூட்டும் அதிசயமாக, வெறும் 150 கிராம் எடை மட்டுமே கொண்ட சிறிய பறவையொன்று சுமார் 101 மணி நேரம் எவ்வித ஓய்வும் இன்றித் தொடர்ச்சியாக பறந்து 5,700 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த நீண்ட பயணத்தின் இடைப்பட்ட நேரத்தில் அந்தப் பறவை எங்கும் தரையிறங்கி ஓய்வெடுக்கவோ, உணவு தேடவோ இல்லை என்பது பறவையியல் ஆராய்ச்சியாளர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவிலிருந்து தொடங்கிய 'அபாபாங்' எனப் பெயரிடப்பட்ட இந்த அமூர் வல்லூறு பறவையின் சாகசப் பயணம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

வருடாந்திர வலசைப் பயணம்

கண்டம் விட்டு கண்டம் பாயும் வருடாந்திர வலசைப் பயணம்

ஒவ்வொரு ஆண்டும் அமூர் வல்லூறு இனப் பறவைகள் கிழக்கு ரஷ்யா, வடகிழக்கு சீனா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ள தங்களது இனப்பெருக்கப் பகுதிகளிலிருந்து, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள குளிர்கால வாழ்விடங்களை நோக்கி பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிற்கு வலசை செல்கின்றன.

இந்த நீண்ட நெடிய பயணத்தின் மிகவும் சவாலான பகுதியாக கருதப்படுவது பரந்து விரிந்த அரபிக்கடலாகும்.

நடுக்கடலில் எங்கும் ஓய்வெடுக்க வழியில்லாத சூழலில், காற்றின் போக்கைப் பயன்படுத்தி இடைவிடாமல் பறந்து அரபிக்கடலைக் கடக்கும் அபாரத் திறனை இந்தப் பறவைகள் பெற்றுள்ளன.

தற்போது அபாபாங் என்ற பறவையும் அதேபோன்று இடைவிடாமல் பறந்து இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

ஆற்றல்

வடகிழக்கு இந்தியாவில் தங்கி ஆற்றலைப் புதுப்பிக்கும் விதம்

இந்தியாவை பொறுத்தவரை, அமூர் வல்லூறுகளின் பெரும் கூட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் நாகாலாந்து ஆகிய பகுதிகளுக்கு வருகை தருகின்றன.

இவைதான் அப்பறவைகளின் முக்கியமான இடைநிலை பயண நிறுத்தங்களாகும்.

இங்குத் தங்கியிருக்கும் நாட்களில், அப்பகுதிகளில் அதிக அளவில் காணப்படும் பூச்சிகளை வேட்டையாடி உண்டு, தங்களது உடலில் கொழுப்புச் சத்தை சேமித்துக்கொள்கின்றன.

அடுத்தகட்டமாக கடல் கடந்து ஆப்பிரிக்கா செல்வதற்கு தேவையான அபரிமிதமான ஆற்றலை இந்தப் பயண நிறுத்தங்களின் மூலமே அவை புதுப்பித்துக் கொள்கின்றன.

ADVERTISEMENT

செயற்கைக்கோள் கண்காணிப்பு

செயற்கைக்கோள் கண்காணிப்புத் திட்டமும் விஞ்ஞானிகளின் ஆய்வும்

இந்தப் பறவைகளின் வலசைப் பாதையை துல்லியமாக அறிந்து கொள்வதற்காக விஞ்ஞானிகள் செயற்கைக்கோள் கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

மணிப்பூர் அமூர் வல்லூறு கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய வனவிலங்கு நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கடந்த நவம்பர் 2023-ஆம் ஆண்டில் இரண்டு அமூர் வல்லூறுகளின் உடலில் மிகவும் இலகுரக செயற்கைக்கோள் டிரான்ஸ்மிட்டர்களை பொருத்தினர்.

இந்தக் கருவிகளின் உதவியுடன் அப்பறவைகளின் தற்போதைய இருப்பிடம், அவை பயணிக்கும் வான்வழிப் பாதை மற்றும் வெவ்வேறு நிறுத்தங்களில் செலவிடும் நேரம் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

வனவிலங்கு ஆர்வலர்கள்

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சி

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹுவும், இந்தப் பறவைகளின் வியப்பூட்டும் வலசைப் பயணம் குறித்த சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் தகவல்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு சிறிய பறவை எவ்வித நவீன வழிகாட்டியும் இன்றி, இயற்கையின் உள்ளுணர்வால் மட்டுமே கண்டம் விட்டு கண்டம் கடந்து செல்வது உயிரினப் பன்முகத்தன்மையின் மகத்துவத்தை உணர்த்துகிறது.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் இந்தத் தொடர் கண்காணிப்பு, வலசைப் பறவைகளின் பாதுகாப்பிற்கும் அவற்றின் வாழ்விடங்களைப் பராமரிப்பதற்கும் பெரிதும் துணைபுரியும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT