முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் ஆதித்யா-L1 செயற்கைகோள் படம்பிடிக்குமா? விளக்குகிறார் இஸ்ரோ இயக்குனர்
இன்று நடைபெறவுள்ள முழு சூரிய கிரகணத்தை இந்தியாவின் சூரிய செயற்கோள், ஆதித்யா-L1 படம்பிடிக்காது என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் விண்வெளி அடிப்படையிலான சூரிய ஆய்வகமான ஆதித்யா-எல்1 சூரியனை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. ஆனால் இன்று முழு சூரிய கிரகணத்தை அது படம்பிடிக்காது. அதற்கு காரணம், இந்த ஆதித்யா-எல்1 செயற்கைக்கோள், சூரியனை 24x7, 365 நாட்கள் தடையில்லாமல் பார்க்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்வைத் தவறவிடும். இந்நிகழ்வு குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏப்ரல் 8, 2024 அன்று, முழு சூரிய கிரகணம் வட அமெரிக்காவைக் கடந்து, மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவைக் கடக்கும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது."
ஆதித்யா L1 இந்த கிரகணத்தை தவறவிட்டது, இஸ்ரோ தவறா?
ஆதித்யா எல்1 இந்த நிகழ்வைக் காண முடியாதது, இஸ்ரோவின் தவறினால் அல்ல. அவர்கள் தெரிந்தேதான் சூரியனை 24x7, 365 நாட்கள் தடையில்லாமல் பார்க்கும் இடத்தில் ஆதித்யா L1-ஐ நிறுத்திவைத்துள்ளனர். இது போன்ற கிரகணத்தின் போதுகூட செயற்கைக்கோளின் பார்வை ஒருபோதும் தடுக்கப்படாமல் இருக்க, இந்திய விஞ்ஞானிகள் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். "சந்திரன் விண்கலத்தின் பின்னால் இருப்பதாலும், லாக்ரேஞ்ச் பாயின்ட் 1 (எல் 1 புள்ளி) இல் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாலும், அங்கே கிரகணம் தென்படாது" என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் என்டிடிவியிடம் தெரிவித்தார். ஆதித்யா எல்1 விண்கலம், பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள சூரியன்-பூமி அமைப்பின் லாக்ரேஞ்ச் புள்ளி 1 (L 1)ஐச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் வைக்கப்பட்டுள்ளது.
செயற்கையாக உருவாக்கப்படும் கிரகணம்
உண்மையில், ஆதித்யா எல்1, அதன் சிறப்புக் கருவியான விசிபிள் எமிஷன் லைன் கரோனாகிராஃப்(VELC) மூலம் சூரியனை திறம்பட ஆய்வு செய்ய, தானே செயற்கை சூரிய கிரகணத்தை உருவாக்குகிறது. இதுபற்றி சோமநாத் கூறுகையில்,"சூரியனின் வட்டில் இருந்து ஒளியை அகற்றுவதன் மூலம், ஒரு சூரிய கிரகணம் கரோனாகிராப்பில் உருவாக்கப்படுகிறது." பெங்களூருவில் உள்ள இந்திய வானியற்பியல் கழகத்தின் (IIAP) சூரிய இயற்பியலாளர் டாக்டர். திபாங்கர் பானர்ஜி, இந்த கரோனோகிராப் விஞ்ஞானிகளுக்கு விண்வெளியில் இருந்து பார்க்கும் சூரிய கிரகணத்திற்கும், பூமியில் இருந்து பார்பதற்குமான வேர்ப்பட்டை ஆய்வு செய்யவும் வாய்ப்பளிக்கிறது என்கிறார். இன்றைய கிரகணத்தின் போது, பானர்ஜி, அமெரிக்காவின் டெக்சாஸ், டல்லாஸில் சில பரிசோதனைகளை மேற்கொள்வார். பின்னர் அந்த தரவு. அதே பார்வைக் காலத்திற்கான ஆதித்யா எல்1 தரவுகளுடன் ஒப்பிடப்படும்.