உலக உடற்பருமன் தினம்: உடல் பருமன் மிகக்குறைவாக உள்ள நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
செய்தி முன்னோட்டம்
இன்று உலக உடற்பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உடல் பருமன் ஒரு பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், ஆசிய மற்றும் ஆப்பிரிக்காவை சேர்ந்த சில நாடுகள் இன்றும் மிகக்குறைந்த அளவிலான உடற்பருமன் விகிதத்தைக் கொண்டுள்ளன. அவர்களின் பாரம்பரிய உணவுமுறை மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
உடற்பருமன்
உடற்பருமன் குறைவாக உள்ள 5 நாடுகள்
1.வியட்நாம்: உலகிலேயே மிகக்குறைந்த உடற்பருமன் கொண்ட நாடாக வியட்நாம் திகழ்கிறது. இங்கு 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே அதிக எடையுடன் உள்ளனர். காய்கறிகள், மூலிகைகள் மற்றும் மீன் சார்ந்த இவர்களது உணவுமுறையும், அதிகப்படியான நடைப்பயிற்சியும் இவர்களை ஆரோக்கியமாக வைத்துள்ளன. 2.வங்கதேசம்: அரிசி, பருப்பு மற்றும் மீன் உள்ளிட்ட சத்தான உணவுகளை உண்பதால் இங்கு உடற்பருமன் மிகக்குறைவாக உள்ளது. 3.திமோர்-லெஸ்டே: பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து, உள்ளூர் மக்காச்சோளம் மற்றும் காய்கறிகளை உண்பதால் இந்நாடு பட்டியலில் முன்னிலை வகிக்கிறது. 4.எத்தியோப்பியா: டெஃப் போன்ற சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகளை அதிகம் உட்கொள்வது இந்நாட்டு மக்களின் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. 5.நேபாளம்: மலைப்பகுதிகளில் வசிப்பதாலும், உடல் உழைப்பு அதிகம் உள்ளதாலும் இவர்களது உடல் எடை குறைவாக உள்ளது.
இந்தியா
இந்தியாவின் நிலை என்ன?
மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் உடற்பருமன் விகிதம் (6-7%) மிதமானதுதான். ஆனால், நகர்ப்புறங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறையினால் இது வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஊட்டச்சத்து குறைபாடும் உடற்பருமனும் ஒரே நேரத்தில் நிலவும் 'ஊட்டச்சத்து குறைபாட்டின் இரட்டை சுமை' இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. சத்தான உணவும், முறையான உடற்பயிற்சியுமே இந்த பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.