Loading...
மார்பகப் புற்றுநோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்: மாதச் செலவு ரூ. 21 லட்சம்
மார்பகப் புற்றுநோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க எஃப்.டி.ஏ ஒப்புதல்

மார்பகப் புற்றுநோய் தடுப்பு மாத்திரைக்கு அமெரிக்க FDA ஒப்புதல்: மாதச் செலவு ரூ. 21 லட்சம்

எழுதியவர் Vasuki
Nov 25, 2026
02:05 pm

செய்தி முன்னோட்டம்

ஆரம்பகட்ட மார்பகப் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைக்கு பிறகு, நோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையில் ரோச் நிறுவனம் தயாரித்துள்ள தினசரி ஒருமுறை உட்கொள்ளும் 'வில்செர்ட்லி' மாத்திரைக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆரம்பகட்ட மார்பக புற்றுநோய்க்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய ஹார்மோன் சிகிச்சை இதுவாகும். 4,170 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஆய்வில், வழக்கமான ஹார்மோன் சிகிச்சைகளை விட இந்த மாத்திரை புற்றுநோய் மீண்டும் வரும் அல்லது உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தை 30 சதவீதம் குறைப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

செயல்பாடு

புதிய தொழில்நுட்பத்தில் செயல்படும் மாத்திரை

மொத்த மார்பகப் புற்றுநோய் பாதிப்புகளில் சுமார் 70 சதவீதமாக உள்ள ஈஸ்ட்ரோஜன் ஏற்பி பாசிட்டிவ், ஹெர்2-நெகட்டிவ் வகைப் புற்றுநோயாளிகளுக்கு இம்மருந்து பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

வழக்கமான மருந்துகள் உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்க மட்டுமே செய்யும் நிலையில், 'வில்செர்ட்லி' மாத்திரை புற்றுநோய் செல்களில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளையே சிதைத்துப் புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கிறது.

ஆரம்பகட்ட புற்றுநோயில் 30 சதவீதமும், முற்றிய நிலையில் 62 சதவீதமும் நோய் வளர்ச்சியை இது கட்டுப்படுத்துவதாக டெல்லி புற்றுநோய் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விலை

மாதச் செலவு ரூ. 21 லட்சம்

அமெரிக்கச் சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த மாத்திரையின் மாதச் செலவு 22,500 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 21 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து இந்தியாவிற்கு வர இன்னும் காலதாமதமாகும் என்பதோடு, அப்படியே வந்தாலும் சாதாரண மக்களால் வாங்க முடியாத அளவுக்கு இதன் விலை மிக அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், முற்றிய நிலைப் புற்றுநோய்க்கு இம்மருந்தை வழங்குவதற்கு முன்பு செய்யப்படும் பரிசோதனைக்கே ரூ. 1 முதல் ரூ. 2 லட்சம் வரை செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

எச்சரிக்கை

பக்கவிளைவுகள் மற்றும் கவனிக்க வேண்டியவை

மற்ற புற்றுநோய் சிகிச்சைகளைப் போலவே 'வில்செர்ட்லி' மாத்திரையாலும் தசை மற்றும் மூட்டு வலி, அதிக வியர்வை, சோர்வு, தலைவலி, குமட்டல், இதயத் துடிப்பு குறைதல் மற்றும் கை, கால்களில் மரத்துப்போதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள் இம்மருந்தை உட்கொண்டால் கருவில் இருக்கும் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாதவிடாய் நிற்காத பெண்கள் மற்றும் சில ஆண்கள் இம்மாத்திரையுடன் கூடுதல் ஹார்மோன் கட்டுப்பாட்டு மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

ADVERTISEMENT