நண்பர்கள் தினம் 2024 : வரலாறு மற்றும் முக்கியத்துவம்
நட்பு என்பது மனித உறவுகளின் உண்மையான வடிவம். ஜாதி, மதம், நிறம், வயது, மதம் மற்றும் இனம் ஆகியவற்றின் அனைத்து வகையான சமூகத் தடைகளையும் தவிர்த்து, நிபந்தனையற்ற அன்பை இது அடிப்படையாகக் கொண்டது. நண்பர்கள் எப்போதும் நம்மை விட்டு விலகுவதில்லை. ஒவ்வொரு நாளுமே நட்புக்கான நாளாக இருந்தாலும், ஆண்டின் ஒரு தினம் இதற்காகவே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், நண்பர்கள் தினம் இந்த ஆண்டு இந்தியாவில் ஆகஸ்ட் 4, 2024 அன்று கொண்டாடப்படுகிறது. நட்பு தின கொண்டாட்டம், நாட்டுக்கு நாடு மாறுபடும். இந்தியா, வங்கதேசம், மலேசியா போன்ற நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நட்பு தினம் கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தினத்தின் பின்னணி
1930களில் அமெரிக்காவில் ஜாய்ஸ் ஹால் என்பவரால் இது முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் 'ஹால்மார்க் கார்ட்ஸ்' நிறுவனத்தின் தலைவர் என்பதால், தனது நிறுவனத்தின் வாழ்த்து அட்டைகளை விற்கவே இதை முன்மொழிகிறார் என்ற பேச்சு எழுந்ததால், அங்கு நண்பர்கள் தினம் பிரபலமடையவில்லை. அதன் பிறகு, பராகுவேயில் 1958இல் சர்வதேச நண்பர்கள் தினம் முன்மொழியப்பட்டு, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இறுதியாக, ஐக்கிய நாடுகள் சபை 2011இல் அமைதி, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்க ஜூலை 30ஐ அதிகாரப்பூர்வ சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது. அப்போது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிவிப்பில், நட்பு என்பது மக்கள், நாடுகள், கலாச்சாரங்கள் மற்றும் தனிநபர்களிடையே அமைதி முயற்சிகளை ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்களை இணைக்க முடியும் என்று தெரிவித்தது.
உலக நாடுகளில் நண்பர்கள் தினம்
ஐக்கிய நாடுகள் சபை ஜூலை 30ஆம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தாலும், உலக நாடுகள் பலவும் வெவ்வேறு தினங்களில் இதை கொண்டாடி வருகின்றன. இந்தியா, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மாற்று மலேசியா போன்ற நாடுகள் ஆகஸ்ட் முதல் வார ஞாயிற்றுக்கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில், பின்லாந்து, எஸ்தோனியா, வெனிசுலா, ஈகுவடார் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்றே நண்பர்கள் தினத்தையும் கொண்டாடி வருகின்றனர். மேலும், பாகிஸ்தானில் ஜூலை 19, அர்ஜென்டினா, பிரேசில், ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஜூலை 20, பொலிவியாவில் ஜூலை 23 மற்றும் நேபாளத்தில் ஜூலை 30 ஆகிய தேதிகளில் இது கொண்டாடப்படுகிறது.
நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம்
நாம் ஒவ்வொரு நாளும் நமது நட்பையும், நண்பர்களையும் கொண்டாட வேண்டும் என்றாலும், சர்வதேச நட்பு தினம் என்பது, நம் வாழ்வில் நட்பின் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது. உங்கள் நண்பரிடம் பேசாமல் அல்லது உங்கள் வாழ்க்கைச் சூழ்நிலைகளைப் பற்றி அவர்களிடம் சொல்லாமல் இருக்கும் ஒரு நாளை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நம் அன்பான நண்பர்கள் இல்லாமல் நம் வாழ்க்கை மகிழ்ச்சி அற்றது. அவர்கள் நமது வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்குகிறார்கள். கடினமான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் எப்போதும் நம் பக்கம் நிற்பதால், அவர்கள் நமது இரண்டாவது குடும்பம் போல் உள்ளார்கள். அத்தகையவர்களை ஒவ்வொரு நாளும் கொண்டாட வேண்டும், நமக்கு இருக்கும் நண்பர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். நம் நட்பைப் போற்ற வேண்டும்.
நண்பர்கள் தினத்தை கொண்டாடுவது எப்படி?
சர்வதேச நண்பர்கள் தினத்தை மக்கள் பல்வேறு வழிகளில் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடலாம், பரிசுகள் அல்லது அட்டைகளைப் பரிமாறிக் கொள்ளலாம். சமூகக் கூட்டங்கள் அல்லது விருந்துகளை ஏற்பாடு செய்யலாம். மேலும் தங்கள் நட்பை வலுப்படுத்தும் செயல்களில் ஈடுபடலாம். இது தவிர, மஞ்சள் ரோஜா பெரும்பாலும் நட்பின் அடையாளமாக கருதப்படுகிறது மற்றும் நண்பர்கள் தினத்தில் இது நண்பர்களிடையே அதிக அளவில் பரிமாறப்படுகிறது. மேலும், ஏதோ சில காரணங்களால் பிரிந்திருந்த நண்பர்களை ஒன்று சேர்க்கவும், அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளை தீர்க்கவும் நண்பர்கள் தினம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. ஐநா சபை 2024ஆம் ஆண்டுக்கான நண்பர்கள் தின கருப்பொருளாக "பன்முகத்தன்மையை தழுவுதல், ஒற்றுமையை வளர்ப்பது" என்பதை உருவாக்கியுள்ளது.