வெற்றிகளை வழங்கும் விஜயதசமி - வரலாறு அறிவோம் வாருங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா முழுவதும் விஜயதசமி பண்டிகையானது தசரா, தசைன், தசஹரா உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை முடிந்து 10வது நாளாக விஜயதசமியை நாம் கொண்டாடுகிறோம்.
நவராத்திரி நாட்களான 9 நாட்களும் மகேஸ்வரி, வராகி, கெளமாரி, வைஷ்ணவி, மகாலட்சுமி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி உள்ளிட்ட 9 சக்தி வடிவங்களை பக்தர்கள் விரதமிருந்து கோயிலுக்கு சென்றும், வீட்டிலும் வழிபாடு செய்வதுண்டு.
தாங்கள் நினைத்தது நிறைவேறும் என்னும் நம்பிக்கையில் தான் இந்த நவராத்திரி வழிபாடுகளை பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.
வரலாறு
மும்மூர்த்தி தெய்வங்களால் உருவாக்கப்பட்ட மாகாளி
மகிஷன் என்னும் அசுரன் சாகா வரம் வேண்டி பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிகிறான்.
எந்தவொரு மனிதராலும், அரக்கன், மிருகம் உள்ளிட்ட எந்தவொரு உயிராலும் தன்னை கொல்ல முடியாது.
கருவில் உருவாகாத பெண்ணை தவிர வேறு யாராலும் தனக்கு இறப்பு ஏற்படக்கூடாது என்னும் வரத்தினை அவன் பெறுகிறான்.
வரம் பெற்ற ஆணவத்தில் அந்த அசுரன் தேவர்கள், உலக மக்கள் என அனைவரையும் துன்புறுத்த துவங்குகிறான்.
அவனிடம் இருந்து தங்களையும் இந்த உலகத்தையும் காக்குமாறு தேவர்கள் மும்மூர்த்தி தெய்வங்களான சிவன், நாராயணன் மற்றும் பிரம்மனிடம் சென்று முறையிடுகிறார்கள்.
அதன் பேரில், இவர்கள் மூவரின் சக்தியும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய சக்தி தான் மாகாளி என்று வரலாறு கூறுகிறது.
நாள்
அசுரனை அழித்து வெற்றியடைந்த 10வது நாள்
மாகாளியாக உருவெடுத்த துர்க்கை அம்மன், மகிஷன் என்னும் அந்த அசுரனனோடு 9 நாட்கள் போர் செய்து, வெற்றியடைந்த 10வது நாள் தான் இந்த விஜயதசமி.
வடமாநிலங்களில் இதனை தசரா என்று கூறுகிறார்கள்.
மகிஷா அசுரனை கொன்றதால் மகிஷாசூரமர்தினி என்னும் பெயராலும் துர்க்கை அம்மனை பக்தர்கள் துதித்து வருகிறார்கள்.
வெற்றியின் கொண்டாடட்டமாக கருதப்படும் இந்நாளில் எந்தவொரு புது செயலை துவங்கினாலும் வெற்றி பெறலாம் என்னும் நம்பிக்கையின் பேரிலும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு
ராவணனை ராமன் வதம் செய்த நாள் இன்று
தமிழ்நாடு மாநிலத்தில் இன்றைய தினத்தில் குழந்தைகளை முதன்முறையாக பள்ளிகளில் சேர்ப்பது, புதிதாக நடன வகுப்பு, இசை வகுப்பு, உள்ளிட்டவைகளை செய்வார்கள்.
இன்றைய தினத்தில் துவங்கும் எந்தவொரு செயலும் சிறப்பான முறையில் வெற்றியடையும், கல்வி கடவுளான சரஸ்வதி தேவியின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வடமாநிலங்கள் விஜயதசமியை ராமன் ராவணனை வதம் செய்த நாளாகவும் இந்த தினத்தினை கொண்டாடி வருகிறார்கள்.
கோயில்
கோயில்களில் சிறப்பு ஹோமங்கள் மற்றும் உற்சவங்கள் நடைபெறும்
பத்தாம் நாளான இன்றும் கோயில்களில் பலதரப்பட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
பல கோயில்களில் சண்டி ஹோமம் நடக்கும்.
இதில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்று என்று கூறப்படுகிறது.
சண்டி என்றால் முப்பெரும் தேவிகள் என்று அர்த்தமாகிறது.
மேலும், சிவன் கோவில்கள் அனைத்திலும் பரிவேட்டை என்னும் உற்சவம் நடத்தப்படும்.
இதில் சிவன் வன்னி மரம் நோக்கி அம்புகளை எய்வார்.
இதன் பொருள் என்னவென்றால், வன்னி மரம் மனிதனாகவும், அம்பு ஞானமாகவும் கருதப்படுகிறது.
மனிதனுக்கு சிவன் ஞானத்தை வழங்கும் ஓர் நிகழ்வாக இது நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.