Loading...
ஒல்லியா இருந்தாலும் PCOS வரலாம்! 3-5% இளம் பெண்களுக்கு பாதிப்பு; எய்ம்ஸ் ஆய்வு அதிர்ச்சி தகவல்
3-5% இளம் பெண்களுக்கு PCOS பாதிப்பு இருப்பதாக எய்ம்ஸ் ஆய்வில் தகவல்

ஒல்லியா இருந்தாலும் PCOS வரலாம்! 3-5% இளம் பெண்களுக்கு பாதிப்பு; எய்ம்ஸ் ஆய்வு அதிர்ச்சி தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 04, 2026
07:16 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவர்கள் நடத்திய சமீபத்திய பள்ளி அளவிலான பரிசோதனைத் திட்டத்தில், 3 முதல் 5 சதவீத இளம் பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள 7 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட சிறுமிகளிடம் நடத்தப்பட்ட இந்த தொடக்கக்கட்ட சோதனையில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. PCOS என்பது வெறும் கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனை மட்டுமல்லாமல், உடலின் ஹார்மோன் மற்றும் வளர்சிதை மாற்ற அமைப்புகளையும் பாதிக்கும் நோய் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இளம் பருவத்தினர்

இளம் பருவத்தினருக்கு PCOS நோயைக் கண்டறிவதில் உள்ள சவால்கள்

இளம் பெண்களுக்கு மாதவிடாய் சீரற்று இருப்பதாலேயே அவர்களுக்கு PCOS பாதிப்பு இருப்பதாக முடிவெடுக்க முடியாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

முதல் மாதவிடாய்க்குப் பிறகு சுழற்சி சீரடைய சில காலம் எடுக்கும் என்பதால், பருவமடைதலின் இயல்பான அறிகுறிகளிலிருந்து இப்பாதிப்பைப் பிரித்தறிவது கடினமாகும்.

எனவே, சர்வதேச வழிகாட்டுதல்களின்படி தொடர்ச்சியான மாதவிடாய் சீரின்மை மற்றும் அதிகப்படியான ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு ஆகிய இரண்டும் இருந்தால் மட்டுமே இளம் பருவத்தினருக்கு PCOS நோயறிதல் உறுதி செய்யப்படுகிறது.

மேலும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.

ஒல்லியாக இருப்பவர்கள்

ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கும் PCOS பாதிப்பு வரக்கூடும்

PCOS பாதிப்பை உடல் பருமனுடன் மட்டுமே தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது என எய்ம்ஸ் குழந்தைகள் என்டோகிரைனாலஜி துறை பேராசிரியர்கள் எச்சரிக்கின்றனர்.

இயல்பான உடல் எடை அல்லது மெலிந்த உடலமைப்பு கொண்ட பெண்களுக்கும் இப்பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இது Lean PCOS என்று அழைக்கப்படுகிறது.

மரபணு, ஹார்மோன் மாற்றங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் அதிகப்படியான மொபைல் திரை நேரம் போன்ற வாழ்வியல் முறைகளே இன்சுலின் எதிர்ப்பை உருவாக்கி இந்த பாதிப்பிற்கு முதன்மை காரணமாக அமைகின்றன.

ADVERTISEMENT

தீர்வுகள்

உளவியல் ரீதியான பாதிப்புகளும் ஆரம்பக்கட்ட தீர்வுகளும்

PCOS பாதிப்பால் ஏற்படும் எடைகூடுதல், முகப்பருக்கள் மற்றும் தேவையற்ற உரோம வளர்ச்சி ஆகியவை இளம் பெண்களின் மனநலனைப் பெருமளவில் பாதிக்கின்றன.

இது அவர்களின் தன்னம்பிக்கையைக் குறைத்து, மன அழுத்தம் மற்றும் கவலையை ஏற்படுத்துகிறது.

இப்பாதிப்பைத் தவிர்க்கச் சீரான உணவுமுறை, தினசரி உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மேலும், நோயின் தன்மையை முழுமையாக விளக்கும் வகையில் இப்பாதிப்பை பாலிஎன்டோகிரைன் மெட்டாபாலிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (PMOS) எனப் பெயர் மாற்றம் செய்யவும் சர்வதேச மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது.

ADVERTISEMENT