மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் மகளிருக்கு மாதம் தோறும் ₹1,000 வழங்கும் திட்டத்தில், மாதம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக இடம்பெற்ற இத்திட்டம், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தில் பல லட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், பலரின் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
காலாண்டு, அரையாண்டுகளில் பயனாளிகளின் தகுதி உறுதிப்படுத்தப்படும்
தமிழ்நாடு அரசு இத்திட்டம் குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் இத்திட்டத்தில் மாதந்தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் வருடத்தின் அரையாண்டு, காலாண்டுகளில் உரிமைத் தொகை பெறுபவர்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களின் தகுதி உறுதி செய்யப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகனப்பதிவு, மின் கட்டணம், சொத்து பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு தரவுகளும் ஆய்வு செய்யப்படும் என, சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். இருப்பினும் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.