பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு ஒத்திவைக்கப்படுமா? - அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கொட்டி தீர்த்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகள் காரணமாக அம்மாவட்டங்களின் பள்ளி அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அது குறித்த தகவலினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தற்போது தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தனியார் விடுதி ஒன்றில் குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை அரசு பள்ளி மாணவர்கள் பயன்பாட்டிற்காக இன்று(டிச.,27) அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைத்துள்ளார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தென்மாவட்டத்தின் கனமழை பாதிப்பால் 4-5 பாடங்களுக்கான அரையாண்டு தேர்வு நடத்தப்படவில்லை. இதனால் வரும் ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறப்படுவதையடுத்து அத்தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்
மேலும், மாணவர்களுக்கு ஓர் பயிற்சியாக இருக்கும் என்பதால் இந்த அரையாண்டு தேர்வுகள் பள்ளிகளின் அளவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு வரும் ஜனவரி 7ம் தேதி நடக்கவிருந்த நிலையில், அத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து முதல்வருடன் ஆலோசிக்கப்படவுள்ளது என்றும் கூறினார். அதே போல் இத்தேர்வை கணினி வழியே ஏன் நடத்தமுடியவில்லை? என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வாணைய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு பேசினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.