ஹிஜாப் தடையை நீக்குமா கர்நாடகா? மாநில உள்துறை அமைச்சர் கூறிய முக்கிய தகவல்
2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இதனால் அப்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு, கடந்த ஜூன் மாதம், கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசாங்கம் அந்த தடையை நீக்குவது விவாதித்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன் மைசூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் சித்தராமையா, ஹிஜாப் அணிவதற்கான தடை விரைவில் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருந்தார். தற்போது ஹிஜாப் அணிவதற்கான தடை எதுவும் கர்நாடகாவில் இல்லை என்று கூறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, பெண்கள் அவர்கள் விரும்புவதை அணியலாம் என்று கூறியிருந்தார்.
'ஆழமாக ஆராய்ந்து அரசு முடிவெடுக்கும்': உள்துறை அமைச்சர்
ஆனால், அதற்கு அடுத்த நாள் பேட்டி அளித்திருந்த முதல்வர் சித்தராமையா, ஹிஜாப் தடையை நீக்குவதற்கான உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறினார். அதனால், ஹிஜாப் தடை கர்நாடகாவில் நீக்கப்படுமா இல்லையா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இந்நிலையில், இது குறித்து இன்று பேசியிருக்கும் அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா, இந்த விஷயத்தை "ஆழமாக" ஆராய்ந்த பிறகு தடையை நீக்குவது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். "ஹிஜாப் தொடர்பாக நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அது நடந்திருந்தாலும் அதை சரிபார்க்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். அதை ஆழமாக ஆராய்ந்து அரசு முடிவெடுக்கும்" என்று ஜி பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.