ரேவந்த் ரெட்டி தெலுங்கானாவின் அடுத்த முதல்வர் ஆக வாய்ப்பு: யார் இவர்?
சமீபத்தில் தேர்தல் நடந்த 5 மாநிலங்களுள் தெலுங்கானாவின் தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக இருந்தது. தற்போது தெலுங்கானாவை ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) வெற்றி பெறும் என்று முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் பலமுறை நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், இன்று நடைபெற்று வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி, தெலுங்கானாவில் பெரும்பான்மையை தாண்டி காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. தெலுங்கானா சட்டசபையில் மொத்தம் 119 இடங்கள் உள்ளன. அதில் குறைந்தது 60 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற்றால் அக்கட்சி மாநிலத்தில் கூட்டணி எதுவும் இல்லாமல் ஆட்சி அமைக்கலாம். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 64 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதுபோக, பிஆர்எஸ் 40 இடங்களிலும், பாஜக 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
முதல்வர் கே.சி.ஆரை பின்னுக்கு தள்ளிய ரேவந்த் ரெட்டி
அதற்கும் மேலாக, காமரெட்டி தொகுதியில், தற்போதைய தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் தலைவரான ரேவந்த் ரெட்டியை விட பின்தங்கியுள்ளார். இந்நிலையில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவை பின்னுக்கு தள்ளி முன்னிலையில் இருக்கும், காங்கிரஸ் மாநில பொது செயலாளரான ரேவந்த் ரெட்டி தான் காங்கிரஸ் கட்சியின் முதன்மையான முதல்வர் வேட்பாளர் என்று கூறப்படுகிறது. எனவே, யாரிந்த ரேவந்த் ரெட்டி என்பதை இப்போது பார்க்கலாம்.
ரேவந்த் ரெட்டியின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கை
அனுமுலா ரேவந்த் ரெட்டி, தனது அரசியல் வாழ்க்கையை அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின்(ABVP) உறுப்பினராகத் தொடங்கி, பின்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதியில்(TRS) சேர்ந்தார். அதன் பிறகு, 2006ஆம் ஆண்டில், ஆந்திரப் பிரதேச(பிரிக்கப்படாத) தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதனால், அவர் TRS கட்சியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து, ஜில்லா பரிஷத் பிராந்திய தொகுதி உறுப்பினர் ஆன ரேவந்த் ரெட்டி, 2008 இல் சுயேச்சையாக சட்ட மேலவை உறுப்பினர் ஆனார். இதற்கிடையில், ரேவந்த் ரெட்டியின் அரசியல் திறமையை உணர்ந்துகொண்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் ரேவந்த் ரெட்டிக்கு வாய்ப்பளித்தார்.
ரேவந்த் ரெட்டி எப்படி காங்கிரஸ் பொது செயலாளர் ஆனார்?
2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 2015ஆம் ஆண்டு தெலுங்கானா சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலில், ஓட்டுக்கு பணம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் செல்வாக்கு சரிவடைந்த நிலையில், ரேவந்த் ரெட்டி 2017இல் காங்கிரஸுக்கு மாறினார். 2019இல் மல்காஜ்கிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஜூலை 2021இல், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த அவருக்கு காங்கிரஸ் பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது
முதல்வர் கே.சி.ஆர் மற்றும் அவரது வாரிசுகளான கே.டி. ராமாராவ் மற்றும் கே.கவிதா போன்ற அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைக்கும் ஒரு காங்கிரஸ் தலைவராக தற்போது ரேவந்த் ரெட்டி பார்க்கப்படுகிறார். கே.சி.ஆரின் "பரம்பரை அரசியலை" விமர்சிப்பதற்கு பெயர் போனவர் இந்த ரேவந்த் ரெட்டி ஆவார். காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கும் நிலையில், ரேவந்த் ரெட்டிக்கு தான் முதல்வர பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 2014ல், தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்து அந்த மாநிலத்தை கே.சந்திரசேகர் ராவ் தான் ஆட்சி செய்து வருகிறார். எனவே, தெலுங்கானா மாநிலத்தில் தலைமை மாற்றம் ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.