ஜம்மு காஷ்மீரின் தோடாவில் 5 ராணுவ வீரர்களை கொன்ற காஷ்மீர் புலிகள் அமைப்பின் பின்புலம் என்ன?
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று அதிக ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ஒரு ராணுவ கேப்டன் உட்பட 4 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ்காரர் என ஐவர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமதுவின் (JeM) நிழல் குழுவான 'காஷ்மீர் புலிகள்' பொறுப்பேற்றுள்ளது. இந்த குழு தான் கடந்த ஜூலை 9-ம் தேதி கதுவாவில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கும் பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. யார் இந்த காஷ்மீர் புலிகள்? திடீரென இவர்களின் பயங்கரவாத செயல்கள் அதிகரித்ததன் பின்புலம் என்ன?
காஷ்மீர் புலிகளின் பின்னணி
காஷ்மீர் புலிகள், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM)இன் முன்னணி அமைப்பாக நம்பப்படுகிறது. 2019இல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட உடனேயே இந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டதாக பாதுகாப்புப் பணியாளர்கள் கூறுகின்றனர். மற்ற பயங்கரவாதக் குழுக்களான ஜெ.எம்., அல்லா டைகர்ஸ் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இஸ்லாமியப் பெயர்களைக் கொண்டவர்கள் போலல்லாமல், இந்தக் குழு மதத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத பெயரை கொண்டுள்ளது. "புதிய குழுக்கள் என்று அழைக்கப்படுபவை, LeT மற்றும் JeM இன் முன் அணிகளாகும். அவர்களுடைய மதச்சார்பின்மை, அவர்களுடைய பெயருக்கு மட்டுமே. மேலும் மதத்தை விட அரசியல் சார்ந்த ஒரு பிம்பத்தை அவர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டே இப்பெயர்கள் தேர்வு செய்யப்படுகின்றன" என்கிறார்கள்.
இந்திய அரசிற்கு எதிரான கோபத்தில் உருவானவை
ஜம்மு காஷ்மீரில் 2019க்குப் பிந்தைய சூழ்நிலையில் காஷ்மீர் புலிகள் போன்ற குழுக்கள், ஆளும் இந்திய அரசின் மீதான உள்ளூர் மக்களின் கோபத்தில் தோன்றியவை என்பதைக் காட்டுவதற்காக இப்பெயரில் அமைக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. டிசம்பர் 2021இல், ஸ்ரீநகரின் மிகவும் பாதுகாப்பு நிறைந்த பகுதியில் போலீஸ் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பிறகு, அதுவரை அறியப்படாத இக்குழு பெரிய தலைப்புச் செய்தியாக மாறியது. அதன்பிறகு, யூனியன் பிரதேசத்தில், குறிப்பாக சமீப காலங்களில் நடந்த பல தாக்குதல்களுக்கு இவர்களே காரணம். ராணுவம் மற்றும் காவல்துறையை குறிவைத்து இவர்கள் நடத்தும் தாக்குதலில் பல உயிர் பலிகள் நடைபெறுகின்றன. 2021ஆம் ஆண்டு முதல் பிராந்தியத்தில் பயங்கரவாதம் தொடர்பான சம்பவங்களில் 52 பாதுகாப்புப் படையினர் உட்பட 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.