ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன?
செய்தி முன்னோட்டம்
திருநெல்வேலி திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அதிசய கிணறு.
இந்த கிணறு எவ்வளவு மழை பெய்தாலும், வெள்ளம் ஏற்பட்டாலும் நிரம்பவே நிரம்பாது என்று கூறப்படுகிறது.
அதனால் தான் அப்பகுதி மக்கள் இதனை அதிசய கிணறு என்று கூறுகிறார்களாம்.
கடந்த 2022ம் ஆண்டு இந்த கிணற்றின் அருகேயிருந்த குளம் ஒன்று மழை காரணமாக நிரம்பி உபரிநீர் முழுவதும் மட்டுமின்றி பெருமழை காரணமான வெள்ள நீரும் இந்த கிணற்றுக்குள் தான் விழுந்துள்ளது.
கிணறு
பல கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தி விவசாயத்தை மேம்படுத்தியது
பல கன அடி நீரினை உள்வாங்கிய இந்த கிணறு அப்போதும் நிரம்பாமல், சுற்றுவட்டாரத்தில் உள்ள பல கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தி விவசாயத்திற்கு நன்மை பயத்தது.
இது குறித்து அறிந்த சுற்றுவட்டார மக்கள் இதனை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து, இந்த அதிசய நிகழ்வு குறித்து அறிந்த சென்னை ஐஐடி மாணவர்கள் பலர் அங்கு சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.
ஆய்வு
ஐஐடி மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வின் தகவல்
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த கிணறு முழுக்க முழுக்க சுண்ணாம்பு பாறைகளால் உருவாகியுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மேலும் பல ஆண்டுகாலமாக இந்த கிணற்றில் தண்ணீர் தொடர்ந்து கொட்டி வருவதால், சுற்றியுள்ள பாறைகளில் துளைகள் ஏற்பட்டு அது பெரிதாகி சுமார் 50 கி.மீ., சுற்றளவுக்கு நிலத்தடியில் நீர்வழிப்பாதையினை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இதனால் தான் இந்த கிணறு நிரம்புவதுமில்லை, சுற்றுவட்டாரத்தில் உள்ள கிணறுகளின் நீர்மட்டத்தினை உயர்த்தவும் பயன்படுகிறது என்று அவர்கள் நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
கோரிக்கை
பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்துள்ளது
இந்நிலையில், கடந்த 17ம் தேதி பெய்த கனமழையால் 100ல் இருந்து 200 கன அடி நீர் வரை இந்த கிணற்றுக்குள் விழுந்துள்ளது.
எனினும், இந்த கிணறு நிரம்பாமல் தான் இருந்துள்ளது.
இதற்கிடையே, கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிணற்றுக்குள் விழுந்ததால் அடைப்பு ஏற்பட்டு தற்போது அந்த கிணறு நிரம்பியுள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து கிணற்றில் சரிந்த மணலை தூர்வாரினால் மட்டுமே சுற்றியுள்ள சுமார் 15கி.மீ.,தொலைவில் அமைந்துள்ள கிணறுகள் அனைத்திலும் நீர்மட்டம் உயரும் என்றும்,
விவசாயம் மேம்படும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
நிரம்பியது அதிசய கிணறு ?
நிரம்பியது ஆயன்குளம் அதிசய கிணறு #TNRains | #Ayankulam | #VelichamTV pic.twitter.com/yYfBTMjFUF
— Velicham TV (@velichamtvtamil) December 19, 2023