ஹிஜாப் அணிவதற்கான தடையை நீக்க இருப்பதாக அறிவித்தது கர்நாடக அரசு
ஹிஜாப் அணிவதற்கான தடையை விரைவில் வாபஸ் பெறுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. தற்போது ஹிஜாப் அணிவதற்கான தடை எதுவும் கர்நாடகாவில் இல்லை என்று கூறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, பெண்கள் அவர்கள் விரும்புவதை அணியலாம் என்று நேற்று தெரிவித்துள்ளார். "ஹிஜாப் தடை இனி இல்லை. பெண்கள் ஹிஜாப் அணிந்து எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். தடை உத்தரவை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளேன். என்ன உடை உடுத்துவது, என்ன உணவை உண்பது என்பது உங்கள் விருப்பமாகும். நான் ஏன் உங்களைத் தடுக்க வேண்டும்?" என்று மைசூரில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப்பை தடை செய்த பாஜக
தாங்கள் விரும்பியதை உண்ணவும், உடுத்தவும் மக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது என்று சித்தராமையா கூறியுள்ளார். "உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் உடுத்துங்கள். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் உண்ணுங்கள். நான் விரும்புவதை நான் சாப்பிடுவேன். நீங்கள் விரும்புவதை நீங்கள் சாப்பிடுங்கள். நான் வேட்டி கட்டுகிறேன். நீங்கள் பேன்ட் சட்டை அணிகிறீர்கள். அதில் என்ன தவறு?" என்று அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கர்நாடகாவில் உள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஹிஜாப் அணிய தடை விதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் அரசாங்கம் அந்த தடையை நீக்க முடிவு செய்துள்ளது.