
துணை ஜனாதிபதி தேர்தல்:யார் அந்த 14 கருப்பு ஆடுகள் என எதிர்க்கட்சி கூட்டணியில் அதிர்ச்சி!
செய்தி முன்னோட்டம்
துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியை சேர்ந்த 14 எம்.பிக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டளித்தது அம்பலமானதால், எதிர்க்கட்சித் தரப்பில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது. NDA வேட்பாளராக போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக INDIA கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் மட்டுமே பெற்றார். 15 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. மொத்த 781 வாக்காளர்களில், 14 பேர் ஓட்டளிக்கவில்லை. இவர்களில் பிஜூ ஜனதாதளம் (7), பி.ஆர்.எஸ். (4), அகாலி தளம் (1), சுயேச்சை எம்.பிக்கள் (2) ஆகியோர்.
எண்ணிக்கை கணக்கு
வாக்கு எண்ணிக்கை எதிர்க்கட்சியில் உள்ள பிளவை காட்டியது
NDA கூட்டணியின் கணிப்புப்படி, கூட்டணியின் மொத்த வலிமை 427 ஓட்டுகள்; YSR காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பிக்கள் ஆதரவு கூட சேர்த்தாலும், 438 ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். ஆனால் ராதாகிருஷ்ணன் 452 ஓட்டுகள் பெற்றதைத் தொடர்ந்து, கூடுதலாக 14 எம்.பிக்கள் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து விலகி வாக்களித்துள்ளது உறுதியானது. இதையடுத்து, அந்த 14 எம்.பிக்கள் யார் என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கவர்னராக பணியாற்றிய அனுபவம் உள்ள ராதாகிருஷ்ணனுக்கு, அந்த மாநில எம்.பிக்களுடன் நெருக்கம் இருந்தது என்பதால், அவர்களே வாக்களித்திருக்கலாம் என்று ஒரு பாஜக நிர்வாகி தகவல் தெரிவித்துள்ளார். இந்த 14 பேரின் ஓட்டுகள், எதிர்க்கட்சி கூட்டணிக்குள் நிலவும் பிளவுகளை அம்பலப்படுத்தியுள்ளது.