
சொன்னீங்களே செஞ்சீங்களா? திருச்சியில் திமுக மீது தவெக தலைவர் விஜய் சரமாரி விமர்சனம்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், வரும் தேர்தலை ஜனநாயகப் போர் என்று குறிப்பிட்டு, தனது பிரசாரப் பயணத்தைத் திருச்சியில் இன்று தொடங்கினார். காந்தி மார்க்கெட் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை முன்பு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் வாகனத்தின் மீது நின்றபடி உரையாற்றிய அவர், "குலதெய்வ கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டுப் போருக்குச் செல்வது போலத்தான், அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணியைத் திருச்சியில் தொடங்குகிறேன். திருச்சியில் தொடங்குவதெல்லாம் திருப்புமுனையாக அமையும்." என்று பேசினார். அவரது பேச்சில் ஆளும் திமுக அரசு மீது அடுக்கடுக்கான கேள்விகளும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
கல்விக்கடன் ரத்து
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து குறித்து கேள்வி
"டீசல் விலை லிட்டருக்கு ₹3 குறைக்கப்படும், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும், அரசு வேலைகளில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயின?" என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும், "பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு, அதைச் சொல்லிக் காட்டி அசிங்கப்படுத்துவதா? மகளிர் உதவித்தொகை எல்லோருக்கும் கிடைக்கவில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கா உங்கள் வாக்கு?" என்று அவர் ஆவேசமாகக் கேட்டார். இதற்கிடையே, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விஜய் தனது பேச்சைச் சுருக்கமாக முடித்துக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விக்கிரவாண்டி மற்றும் மதுரை மாநாடுகளுக்குப் பிறகு, விஜய் முதல்முறையாகப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், தொண்டர்கள் உற்சாகமாகக் கூடினர்.