இந்தியாவில் முறையான வயதுக்கு முன்பே பள்ளிப்படிப்பா? UNESCO-வின் உலகளாவிய கல்வி அறிக்கையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 5 வயதுடைய குழந்தைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர், முன்பருவக் கல்விக்கு பதிலாக நேரடியாக தொடக்கப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக யுனெஸ்கோவின் 2026 உலகளாவியக் கல்வி கண்காணிப்பு(GEM) அறிக்கை எச்சரித்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட வயதுக்கு முன்பே குழந்தைகள் முறையான பள்ளிப்படிப்பில் நுழைவது குறித்து இவ்வறிக்கை கவலை எழுப்பியுள்ளது. மத்தியக் கல்வி அமைச்சகத்தின் UDISE+ தரவுகளின்படி, முதலாம் வகுப்பில் சேரும் முன் முன்பருவக் கல்விக்குச் செல்லாத அல்லது உரிய வயதுக்கு முன்பே பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பங்களிப்பு உலகளவில் 27% ஆக உள்ளது. இப்புள்ளிவிவரம் உயர்வதற்கு இந்தியாவே முக்கியக் காரணம்; இந்தியாவில் 5 வயதுக் குழந்தைகளில் 51% பேர் முன்பருவக் கல்வியை (KG) தவிர்த்து நேரடியாக தொடக்கப் பள்ளிகளில்(1st Standard) பயில்கின்றனர்.
அறிக்கை
யுனெஸ்கோ அறிக்கையின் முக்கிய அம்சங்கள்
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் முன்பருவக் கல்வி அமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதே இந்நிலைக்கு முக்கியக் காரணம் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், முதலாம் வகுப்பில் சேரும் முன் முன்பருவ அனுபவம் பெற்ற மாணவர்களின் பங்கு 2019-இல் 41% ஆக இருந்து, 2025-இல் 80% ஆக உயர்ந்துள்ளது ஆறுதல் தரும் அம்சமாகும்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஆரம்பகாலக் குழந்தை பருவக் கல்வியில் கட்டமைப்பு ரீதியான சிதைவுகள் இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அங்கன்வாடிகள் மற்றும் மாநிலக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் முன்பருவ வகுப்புகள் என இருவேறாகப் பிரிந்து செயல்படுவது கல்வித் தரக் கட்டுப்பாட்டை குறைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEP 2020
தேசியக் கல்விக் கொள்கை
இந்தியாவின் தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020), 3 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளை அடித்தளக் கட்டத்தில் வைத்து, 6 வயதை எட்டிய பின்னரே முதலாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.
மத்திய அரசு 2023-இல் அனைத்து மாநிலங்களுக்கும் 6+ வயது வரம்பை பின்பற்றுமாறு அறிவுறுத்திய போதிலும், மாநிலங்களிடையே இதன் அமலாக்கம் மாறுபட்டு வருகிறது.
கர்நாடகாவில் முன்பருவக் கல்விக்கான உதவித்தொகைத் திட்டம் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தியதை மேற்கோள் காட்டியுள்ள யுனெஸ்கோ, உஸ்பெகிஸ்தான் 7 ஆண்டுகளில் முன்பருவ சேர்க்கையை மூன்று மடங்காக உயர்த்தியதைச் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2024 நிலவரப்படி உலகளவில் 27.3 கோடி குழந்தைகள் பள்ளிக்கல்வியை பெறாமல் வெளியில் இருப்பது சர்வதேச அளவில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.