TVK தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்: 25 லட்சம் இன்சூரன்ஸ் முதல் இலவச தங்கம் வரை
செய்தி முன்னோட்டம்
2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தனது கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்ரல் 16) வெளியிட்டார். சென்னையில், விவசாயிகள், மீனவர்கள் எனப் பல்வேறு தரப்பு மக்களிடம் அறிக்கையின் பிரதிகளை வழங்கி விஜய் சிறப்பித்தார். தேர்தல் அறிக்கையை வெளியிட்டுப் பேசிய விஜய், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருக்குறள் தத்துவமே தவெக-வின் அடிப்படை என்று குறிப்பிட்டார். "எங்கள் தேர்தல் அறிக்கை நேர்மையின் உத்தரவாதம். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை போல நாங்கள் ஏமாற்ற மாட்டோம். மற்றவர்களைப் போல அவசரத்தில் அள்ளிவிட மாட்டோம். எங்களால் என்ன செய்ய முடியுமோ, எது சாத்தியமோ அதை மட்டுமே சொல்லியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026 | தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி நேரலை...https://t.co/vvzNXGPYNE
— TVK Party HQ (@TVKPartyHQ) April 16, 2026
திட்டங்கள்
குடும்பத் தலைவிகள் மற்றும் பெண்களுக்குப் புதிய திட்டங்கள்
பெண்களின் வாக்குகளைக் கவரும் வகையில் தவெக பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை முன்வைத்துள்ளது. தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும். தமிழகம் முழுவதும் 100 உயர்தரப் பள்ளிகள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இலவச உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும். பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்க, 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டுக்கு ரூ. 15,000 வழங்கப்படும். இளநிலை முதல் முனைவர் பட்டம் வரை பயில ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன் (Collateral-free loan) பெற அரசு உத்தரவாதம் அளிக்கும்.
சுகாதாரம்
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான தமிழகம்
AI தொழில்நுட்பம் மூலம் இயங்கும் இலவசப் போட்டித் தேர்வுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 25 லட்சம் வரையிலான உலகளாவிய காப்பீட்டுத் திட்டம் (Global Insurance Scheme). அனைத்து குடிமகன்களுக்கும் ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் மலிவு விலை மருந்துகள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு மன்றங்கள் அமைத்து, தமிழகத்தைப் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுதல். மேலும், சிறுதொழில் செய்பவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் போன்ற பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.