LOADING...
தவெக மாநாட்டில் பவுன்சர்கள் செய்த காரியத்தால் தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு
தவெக தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு

தவெக மாநாட்டில் பவுன்சர்கள் செய்த காரியத்தால் தலைவர் விஜய் உட்பட பலர் மீது போலீசார் வழக்கு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 27, 2025
09:04 am

செய்தி முன்னோட்டம்

மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று மிகுந்த கோலாகலமாக நடைபெற்ற தமிழக வெற்றி கழகம் (தவெக) மாநில மாநாட்டில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஆர்வம் காரணமாக ஏற்பட்ட குழப்பம் தற்போது சட்ட நடவடிக்கைக்கு வழிவகுத்துள்ளது. இதனால், கட்சி தலைவர் விஜய் உடன் வந்த பத்து பவுன்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழாவில் பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள், மேடையில் ஏறிய இளைஞர்களை தடுக்க முயன்றனர். இதில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான சரத்குமார் என்பவர் மேடையில் ஏறி விஜயை அணுக முயன்ற போது, பவுன்சர்களால் தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கீழே விழுந்து தலை மற்றும் மார்பில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

விவரங்கள்

கட்சி தலைவர் மற்றும் பாதுகாவலர்கள் மீது வழக்கு

தவெக மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாட்டாளர்கள் 30 மீட்டர் நீளமான ராம்ப் மேடையை மாநாட்டு திடலில் அமைத்திருந்தனர். விஜய், அந்த மேடையில் நடந்து வந்து தனது தொண்டர்களை நேரில் சந்தித்தார். அப்போது, திரளான இளைஞர்கள் மேடையில் ஏறி விஜயை நெருங்க முயன்றனர். இதனால் சற்றே பரபரப்பு ஏற்பட்டது. விஜயின் பாதுகாப்பிற்காக வந்த பவுன்சர்கள், மேடையில் ஏறிய இளைஞர்களை தடுக்க முயன்றனர். இதில் தான் சரத்குமார் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. முதலில், சரத்குமார் ஒரு ஊடக பேட்டியில் "அப்படி எதுவும் நடக்கவில்லை" என தெரிவித்திருந்தாலும், பின்னர் அவர் பெரம்பலூர் குன்னம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையான புகார் மனுவை அளித்துள்ளார்.